மீனவர்கள் வலையில் சிக்கி அழியும் திருக்கை மீன்கள்!

பாம்பன் மீனவர்கள் வலையில் பிடிபட்ட  குருவி திருக்கை

பாம்பன் மீனவர்கள் வலையில் பிடிபட்ட குருவி திருக்கை

Updated on
1 min read

ராமேசுவரம்: வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2001-ம் ஆண்டு கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், டால்பின், கடல் பன்றி, கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் சங்கு உள்ளிட்ட 52 வகையான உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது.

தொடர்ந்து இந்த பட்டியலில் 16 வகையான சுறா மீன்கள், 6 வகையான உளுவை மீன்கள், பவளப்பாறைகளில் வசிக்கும் சில மீன் இனங்களும் மற்றும் திருக்கை மீன்களில் யானைத் திருக்கை, முள்ளந் திருக்கை, குருவி திருக்கை, கதிர்வாள் திருக்கை, அடைதிரள் திருக்கை மீன்களும் சேர்க்கப்பட்டன.

மத்திய அரசால் முதன் முதலாக தடை செய்யப்பட்ட 52 வகையான கடல்வாழ் உயிரினங்கள் பற்றி மட்டுமே மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளது. அவை வலையில் சிக்கினால் மீண்டும் கடலில் விடப்படுகிறது.

ஆனால், தொடர்ந்து பல்வேறு காலநிலைகளில் தடை செய்யப்பட்ட மீன் இனங்கள், சங்குகள், பற்றிய போதிய விழிப்புணர்வு இன்றி, அவற்றை தொடர்ந்து மீனவர் கள் பிடிப்பதும், விற்பனை செய்வதும் வழக்கம்போல் நடக்கிறது.

மேலும் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட மீன்கள் பற்றிய சமையல் குறிப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன.

தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில் திருக்கை மீன் சீசன் தொடங்கி உள்ளது.

யானைத் திருக்கை, முள்ளந்திருக்கை, குருவித் திருக்கை, சோனகத் திருக்கை, ஆடாத் திருக்கை, புலியன் திருக்கை, கருவா திருக்கை, பூவாத் திருக்கை, மணற் திருக்கை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட வகைகள் பெரும்பாலும் மீனவர்களால் பிடிக்கப்படுகின்றன.

இதில் அழியும் நிலையில் உள்ள யானைக் குருவி திருக்கை மீன்களும் அடக்கம். யானைத் திருக்கையின் உருவம் சிறியதாகவும், தோல் இறுக்கமாகவும், வால் மற்றும் கூர்மையான முட்களைக் கொண்டு, தனித்துவமான உடல் அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த திருக்கை 10 கிலோவிலிருந்து 100 கிலோ எடை வரையிலும் வளரக் கூடியது. இதுகுறித்து கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு மீனவர்கள் மத்தியில் இல்லை.

தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பது, வியாபாரம் செய்வது 1972-ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரத்துக்கும் குறையாத அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க முடியும்.

இதுகுறித்து வனத் துறையினர் மீனவர்களுக்கும், கடலோரப் பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.

<div class="paragraphs"><p>பாம்பன் மீனவர்கள் வலையில் பிடிபட்ட  குருவி திருக்கை</p></div>
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in