ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட்

ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட்
Updated on
2 min read

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதல் மேற்கொண்டதால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி இப்போது இந்திய தேசத்தின் சமையலறையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகுகளுக்கு மாறியுள்ளன. இந்த நிலை தற்போது சீரடையத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில் புதுச்சேரிக்கு அருகே தமிழகப் பகுதியில் அமைந்துள்ள சர்வதேச நகரமான ஆரோவில் நகரில் சூரிய சக்தியில் இயங்கும் ‘சோலார் கிச்சன்’ இயங்கி வருகிறது. இதன் செயல்பாடு குறித்து பார்ப்போம்.

நவீன வடிவிலான சோலார் பேனல்கள் இல்லாமல் ‘சோலார் Bowl’ மூலம் சூரிய ஒளி மூலம் நீரினை வெப்பமடைய செய்து, அதைக் கொண்டு இந்த சோலார் கிச்சனில் சுமார் 80 சதவீத உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் செயல்பாடு குறித்து சோலார் கிச்சனில் பணியாற்றி வரும் ரஜினிகாந்த் விவரித்தார்.

“சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோவில் நகரில் சோலார் கிச்சன் நிறுவப்பட்டது. ஆரோவில் நகரில் வசிக்கும் சமூக மக்கள் மற்றும் ஆரோவில் அறக்கட்டளையும் இணைந்து இதனை நிறுவினர். இதன் நிர்வாகத்தை ஆரோவில் அறக்கட்டளை கவனித்து வருகிறது. இங்கு இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை கொண்டு இந்த சமையலறையை இயக்க செய்ய வேண்டுமென்ற முடிவில் இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது.

இந்த சோலார் கிச்சனில் சிறப்பு என்னவென்றால், இங்குள்ள அமைக்கப்பட்டுள்ள சோலார் Bowl தான். இதில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் சூரிய ஒளி படர்ந்து மேற்புறம் உள்ள ரிப்ளக்டரில் விழும். அந்த வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிப்ளக்டர் வெப்பமடைந்து அதனோடு இணைக்கப்பட்டுள்ள குழாய் வெப்பமடையும். அந்த வெப்பம் உணவகத்தின் கீழ் பக்கம் உள்ள கொதிப்பானுக்கு கடத்தப்படும். அதன் மூலம் அதில் உள்ள நீர் வெப்பமாகும். அதை கொண்டு நாங்கள் இந்த உணவகத்துக்கு தேவையான 80 சதவீத உணவுகளை தயாரிக்கிறோம். இதர சமையல் பணிகளுக்கு விறகுகளை பயன்படுத்துகிறோம். இதன் பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனால் சீரான இடைவெளியில் அதற்கான பணிகளை மேற்கொள்வோம். அதனால் எங்கள் உணவகத்தில் காஸ் சிலிண்டர் தேவை என்பது இல்லை.

முழுவதும் ஆரோவில்லில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு இங்கு உணவு தயார் செய்கிறோம். மதியம் மற்றும் மாலை உணவு இங்கு கிடைக்கும். இது ஆரோவில் சமூக மக்களுக்கான உணவுக்கூடம். வெளிநபர்கள் இங்கு வந்து உணவு சாப்பிட முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 1,500 பேருக்கு உணவு தயாரிக்கிறோம். இதில் சரிபாதிக்கும் மேலான உணவு இங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவகமாக உள்ளது.

இதோடு ஆரோவில் நகரில் உள்ள மூத்த குடிமக்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கேற்ற பிரத்யேக உணவுகளும் (டயட்) தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவகம் மூலம் ஆரோவில்லை சுற்றி அமைந்துள்ள பகுதிகளின் மக்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவினாலும் எங்களுக்கு அதனால் பாதிப்பில்லை” என அவர் தெரிவித்தார்.

சாதம், சாம்பார், வேகவைத்த காய்கறிகள், இட்லி, சாலட், பாஸ்தா உள்ளிட்ட உணவுகள் சோலார் கிச்சனின் மெனுவில் இடம்பெற்றுள்ளது. முழுவதும் சைவ உணவு மட்டுமே இந்த சோலார் கிச்சனில் தயாரிக்கப்படுகிறது.

ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை! - ஒரு விசிட்
வட கொரிய தேர்தலும், ‘வசமான’ 99.93% வாக்குகளும் - கிம் ஜோன் உன் வெற்றிக் ‘கதை’யின் சுவாரஸ்ய பின்னணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in