டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பல்வேறு இடங்களில் AQI 400+ ஆக பதிவு

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பல்வேறு இடங்களில் AQI 400+ ஆக பதிவு
Updated on: 
2 min read

புதுடெல்லி: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று (நவ.8) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று காற்று மாசு அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் காற்று தரக் குறியீடு 400+ ஆக பதிவாகியுள்ளது.

டெல்லி நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி நகரின் 15 காற்று தர கண்காணிப்பு மையத்தில் காற்று தரக் குறியீடு 400+ என பதிவாகி உள்ளது. சோனியா விஹார், விவேக் விஹார், ஜஹாங்கிர்புரி, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு பகுதி வளாகம், ரோஹிணி, சாந்தினி சவுக், பஞ்சாபி பாக், காமன்வெல்த் விளையாட்டு வளாக பகுதி உட்பட பல்வேறு இடங்களில் காற்று தரக் குறியீடு 400+ என உள்ளது.

இதற்கிடையே டெல்லியின் தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதியில் மூடுபனி காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆளும் தரப்பின் அலட்சியம் தான் காரணம் என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா குற்றச்சாட்டு வைத்தார்.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு எதிராக ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் திட்டமிட்டு பரப்பும் போலி பிரச்சாரம் இது என்று டெல்லி யூனியன் பிரதேச அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

காற்று மாசு 50 மடங்கு அதிகரிப்பு

தீபாவளி அன்று டெல்லியில் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு டெல்லி அரசு மக்களை கேட்டுக் கொண்டது. இருப்பினும் அனுமதி நேரத்தை கடந்த பிறகும் டெல்லிவாசிகள் பட்டாசு வெடித்ததாக தகவல். இத்தகைய சூழலில்தான் காற்று மாசு சுமார் 50 சதவீதம் வரை அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, நேற்று இரவு 11 மணிக்கு, அக்‌ஷர்தாமில் PM2.5 (மாசுபாடு) என்ற அளவில் ஒரு கன மீட்டருக்கு 760.99 மைக்ரோகிராம்களாக இருந்தது. உலக சுகாதார நிறுவனம் 24 மணி நேர கால அளவிற்கு நிர்ணயித்துள்ள அனுமதிக்கப்பட்ட அளவான, ஒரு கன மீட்டருக்கு 15 மைக்ரோகிராம்கள் என்பதை விட சுமார் 50.73 மடங்கு அதிகம் என்று தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பட்டாசு புகை காரணமாக சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்பட்டது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. புகை மூட்டம் காரணமாக விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டது. சென்னையில் சில இடங்களில் சாலைகளிலும் புகை மூட்டம் காணப்பட்டதாக தகவல்.

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பல்வேறு இடங்களில் AQI 400+ ஆக பதிவு
ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? - அகிலேஷ் கேள்வி

X