மத்திய அரசு சார்பில் ரூ.40 லட்சத்தில் சிறுமலை அடிவாரத்தில் அமைகிறது சுற்றுச்சூழல் பூங்கா

மத்திய அரசு சார்பில் ரூ.40 லட்சத்தில் சிறுமலை அடிவாரத்தில் அமைகிறது சுற்றுச்சூழல் பூங்கா
Updated on
1 min read

திண்டுக்கல்: மத்திய அரசு சார்பில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி 25 ஏக்கரில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூல் பூங்கா’ அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுமலை. இங்கு பழையூர், புதூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. மா, பலா, வாழை, நெல்லி, எலுமிச்சை, சவ்சவ்,மிளகு, காபி அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அரிய வகை மூலிகைகள், தாவரங்கள், மரங்கள் இங்குள்ளன. காட்டு மாடு, மர அணில், காட்டு பன்றிகள், செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன.

இங்கு வெள்ளிமலை சிவன் கோயில், தோட்டக்கலைத் துறையின் பண்ணை உள்ளது. வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, வனத்துறை சார்பில் தென்மலையில் ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் சிறுமலை அடிவாரத்தில் வனப்பகுதியையொட்டி, 25 ஏக்கரில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இயற்கை அழகை ரசித்த படி, மூலிகை காற்றை சுவாசித்தபடி பூங்காவை சுற்றி நடைப் பயிற்சி செல்ல வசதியாக 2.5 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை அமைக்கபட உள்ளது.

இதற்காக, நிலத்தை தயார் செய்தல் மற்றும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in