

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீக்கு 15 ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சேதமானது. இதில், வன உயிரினங்கள் உயிரிழந்ததாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டம் 1,501 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு 468 வகையான தாவர இனங்கள், 36 வகையான பாலூட்டிகள், 272 வகையான பறவையினங்கள், 172 வகையான வண்ணத்துப் பூச்சி வகைகள் உள்ளன.
குறிப்பாக அய்யூர் முதல் பெட்டமுகிலாளம் வரை 14 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் உள்ளிட்ட மரவகைகளும், அதிக எண்ணிக்கையில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்பு திண்ணிகள், சிறுத்தைகள், மயில்கள் மற்றும் அரிய வகையான சாம்பல் நிற அணில்கள், எகிப்திய கழுகுகள் வசிக்கின்றன. அய்யூரில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையத்துக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அய்யூர் சுற்றுச்சூழல் மையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சாமி ஏரி, தொளுவபெட்டா வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதில், அப்பகுதியில் இருந்த மரங்கள் எரிந்தன.மேலும், வன உயிரினங்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வன ஆர்வலர்களின் குற்றச்சாட்டு: இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறியதாவது: அய்யூர் வனப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் இப்பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்படும். அதை உடனடியாக வனத்துறையினர் கட்டுப்படுத்தி விடுவர்.
தற்போது, வன ஊழியர்கள் பற்றாக்குறையால் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணி குறைந்துள்ளது. இதனால், வனக் குற்றங்களைதடுக்க முடியவில்லை. தற்போது, காட்டுத் தீயில் அரிய வகை வன உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என்றனர்.
விபத்து குறித்து விசாரணை: ஓசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது: கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தைத் தடுக்க 270 கிமீ தூரம் தீத்தடுப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைமீறி அய்யூர் வனப்பகுதியில் கடந்த மாதம் சுமார் 15 ஏக்கரில் தீ பரவியுள்ளது.
இதற்குக் காரணம் மனிதர்கள் வைத்த தீயா அல்லது காட்டுத் தீ பரவியதா என கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், எத்தனை வன உயிரினங்கள் உயிரிழந்தது என்பதும் தெரியவில்லை. இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வேறு ஒரு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணமான 3 பேரைக் கைது செய்து அபராதம் விதித்துள்ளோம் என்றார்.