

ஈரோடு: தாளவாடியில் பிடிபட்டு அந்தியூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ‘கருப்பன்’ எனப் பெயரிடப்பட்ட யானை, கடந்த ஓராண்டாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது. இந்த யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் மகாராஜன்புரம் பகுதியில், ‘கருப்பன்’ யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து அந்தியூர் வனப்பகுதி தட்டக்கரை பகுதியில் யானை விடப்பட்டது. கேமராக்கள் பொருத்தி யானையை சில நாட்கள் வனத்துறையினர் கண்காணித்தனர்.
தாளவாடியை நோக்கி பயணம்: தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வாழை, கரும்பு, சோளம் போன்ற பயிர்களை சாப்பிட்டு வளர்ந்த கருப்பன் யானை, புதிய வனப்பகுதியில் வசிக்க விரும்பவில்லை. இதனால், மீண்டும் தனது பழைய இடத்துக்கு செல்ல நினைத்து பல்வேறு இடங்களில் பாதை மாறி, ஆவேசத்துடன் பயணித்துள்ளது. இதில் கோபியை அடுத்த அத்தாணி, செம்பு செம்புலிச்சம்பாளையம், சஞ்சீவராயன் கோயில் வழியாக வழி தவறி, வரப்பள்ளம் பகுதிக்கு நேற்று வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் மற்றும் தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரக பணியாளர்கள் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அதை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள விளைநிலங்களுக்கும், கிராமங்களுக்குள்ளும் யானை புகுந்து விடும் வாய்ப்பு இருந்ததால், கிராம மக்கள் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அந்தியூரை அடுத்த அடசபாளையம் கிராமத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் யானை புகுந்தது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 4 பேரை ஆவேசத்துடன் யானை தாக்கியது. இதில், சித்தேஸ்வரன் (48) என்பவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் தப்பிவிட்டனர்.
ஆக்ரோஷம் குறையாமல் ‘கருப்பன்’ யானை அப்பகுதியில் சுற்றி வரும் நிலையில், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். யானையை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வனத் துறையினரிடம் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடசாலம் கேட்டறிந்தார். யானை பிடிபடும் வரை, பொது மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யானையை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினரிடம் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடசாலம் கேட்டறிந்தார்.