

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணியில் டி.சுப்புலாபுரம் முதல் கிருஷ்ணன் கோவில் வரை சாலையோரம் உள்ள மரங்களை வெட்டாமல் அகற்றி வேறு இடத்தில் நடவு செய்ய வேண்டும் என பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக- கேரள இரு மாநில இணைப்புச் சாலைகளில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையானது சதுரகிரி, வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், தென்காசி காசி விசுவநாதர் கோயில், குளத்துப்புழை, ஆரியங்காவு ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்களையும், குற்றாலம் உட்பட மேற்கு தொடர்ச்சித் மலை அடிவாரத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களையும் இணைக்கிறது.
இந்த 206 கிமீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலை (என் ஹெச் 208) நான்கு வழிச்சாலையாக (என் ஹெச் 744) மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலைக்கான ஆய்வுப் பணிகள் முடிந்து வழித் தடம் குறித்த தகவல்களுடன் 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதில் முதற்கட்டமாக திருமங்கலம் - ராஜபாளையம் இடையிலான 71.6 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையிலான 36 கி.மீ தூரத்துக்கு ரூ.541 கோடியும், வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கி.மீ தூரத்துக்கு ரூ. 723 கோடிக்கு ஒப்புந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் எம்.சுப்புலாபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்தச் சாலையில் அழகாபுரி முதல் கிருஷ்ணன்கோவில் வரை சாலையின் இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளைக் கடந்த பெரிய மரங்கள். சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
மரங்களை வெட்டாமல் அந்த இடத்திலிருந்து வேரோடு அகற்றி வேறு இடத்தில் அம்மரங்களை நட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: கிருஷ்ணன்கோவில் முதல் ராஜபாளையம் வரை நான்கு வழிச் சாலையில் இரு புறமும் மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது சாலையோரம் இருக்கின்ற மரங்களை வெட்டாமல் வேரோடு இயந்திரம் மூலம் பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்யலாம்.
மரங்களை வேரோடு பிடுங்கி நடவு செய்வது பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மரங்களை 50 ஆண்டுகள் கழித்துதான் வளர்த்துக் கொண்டு வர முடியும். எனவே மரங்களை பிடுங்கி வேறு இடத்தில் நடவு செய்ய தேசிய நான்கு வழிச்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.