

உலகின் ஆபத்தான செடியை தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து வருகிறார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் ஒருவர். அந்த செடி எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை அறியலாம் வாருங்கள்.
பேரண்டத்தில் ஒவ்வொரு படைப்புமே லட்சோப லட்ச ஆச்சரியங்களை கொடுக்கும். அப்படி ஓர் ஆச்சரியத்தைத் தான் இந்தச் செடி கொடுக்கிறது. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ‘இந்தச் செடிய தொட்டதால் குள்ளம் ஆகிவிட்டேன்’ என ஒரு வசனம் வரும். அது கற்பனைதான். இருந்தாலும் அதைவிட ஆபத்தான இந்தச் செடி பிரிட்டனில் வளர்க்கப்பட்டு வருகிறது.
49 வயதான தாவரவியலாளரும், ஆராய்ச்சியாளருமான டேனியல் எம்லின் ஜோன்ஸ் எனும் நபர்தான் இந்தச் செடியை வளர்த்து வருகிறார். செடியை கூண்டுக்குள் வைத்து வளர்த்து வரும் அவர், அதில் அபாயக் குறியீடுகளையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செடியின் பெயர் டென்ட்ரோக்னைடு மொராய்ட்ஸ். ஆஸ்திரேலியாவில் ஸ்டிங்கிங் ட்ரீ என அறியப்படுகிறது. இது செடி வகையை சார்ந்த தாவரம். மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளில் இந்த செடிகள் அதிகம் காணப்படும் என தெரிகிறது. 'ஜிம்பி-ஜிம்பி' என்ற பெயரிலும் இது அறியப்படுகிறது. இந்த பெயரை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியை சேர்ந்த மக்கள் வைத்துள்ளனர். அதிகபட்சம் 33 அடி உயரம் வரை இந்த செடி வளருமாம். 10 அடி உயரத்தில் இருக்கும் போது இந்த செடியில் பூ மற்றும் பழம் கிடைக்குமாம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்குமாம். 12-22 செ.மீ நீளம் மற்றும் 11-18 செ.மீ அகலம் கொண்டிருக்குமாம்.
இந்தச் செடியின் முட்கள், மனிதர்கள் மீது பட்டால் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படுமாம். அதோடு கொதிக்கும் திரவம் பட்டது போன்ற உணர்வும் இருக்குமாம். அது சில மணி நேரங்கள் தொடங்கி பல மாதங்கள் வரை தொடரும் எனத் தெரிகிறது. குறிப்பாக முள் உடலில் பட்டால் அந்த வலி முதலில் லேசாகத்தான் இருக்குமாம். ஆனால் அடுத்த 20 முதல் 30 நிமிடங்களில் வலி அதிகரிக்குமாம். அதன் தீவிரத்தன்மை நபருக்கு நபர் மாறும் என தெரிகிறது. வலி கரணமாக தூக்கம் நீண்ட நேரம் இருக்காதாம். சிலருக்கு உடலில் தோல் பாதிப்பு ஏற்படுமாம். சிலருக்கு உடலில் வீக்கங்கள் கூட ஏற்படுமாம். உலகின் ஆபத்தான செடிகளில் இதுவும் ஒன்று.