

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பகுதியில் 129 பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டி.என்.பி.எஸ்.,) கோயம்புத்தூர், திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங் கிணைந்து பட்டாம்பூச்சிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தின. கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13.987 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கி மதுரை மாவட்டம் வரை மலைப்பகுதி நீண்டுள்ளது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் அதிகம் உள்ளன. சிறுமலையில் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. சிறுமலை வாழை பிரசித்தி பெற்றது. இங்கு மிளகு உள்ளிட்ட பல மலைப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இதமான தட்பவெப்பநிலையும் நிலவுகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பட்டாம் பூச்சி அமைப்புடன் சேர்ந்து சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன், வனச்சரக அலுவலர் சிவா மற்றும் வனஊழியர்கள் பட்டாம்பூச்சி கணக் கெடுப்பை நடத்தினர். அக். 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 129 வகையான பட்டாம்பூச்சிக்கள் சிறுமலையில் இருப்பது தெரியவந்தது.
இவை 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை. எதிர்கால ஆய்வுகளானது பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட வன அலுவர் பிரபு தெரிவித்தார்.