அனல் மின்சாரம் டூ புதுபிக்கதக்க மின்சாரம்: 4 நிலையங்களை மாற்றினால் ரூ.4,000 கோடி பலன்!

அனல் மின்சாரம் டூ புதுபிக்கதக்க மின்சாரம்: 4 நிலையங்களை மாற்றினால் ரூ.4,000 கோடி பலன்!
Updated on
2 min read

காற்று மாசு குறைக்க அனல் நிலையங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் கால நிலை மாற்ற வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்உற்பத்தி நிலையங்களைப் படிப்படியாக மூடப்படும் என்று 40 க்கு மேற்பட்ட நாடுகள் அறிவித்து இருந்தன.

ஆனால், இந்தியாவில் தற்போது கூட நிலக்கரி கொண்டு அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்தான் பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலக்கரி தட்டுப்பாட்டால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடும் இதை உறுதி செய்கிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல

தமிழ்நாடு தனது மொத்த மின் தேவையில் 44 சதவீதம் அனல் மின் நிலையத்தில் இருந்துதான் கிடைக்கிறது. தற்போது எண்ணூர், மேட்டூர், வடசென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மேலும் புதிய நிலைகளை கொண்டு வர அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் தயாரிக்கும் மையம் டிசம்பர் மாத இறுதிக்குள் வணிக ரீதியாக தொடங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முதல் யூனிட் மார்ச் 2024ல் உற்பத்தியை தொடங்குவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பப்பட்டு வருவதாகவும், ஜூன் 2024-ல் மற்றொரு யூனிட் உற்பத்தியை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இப்படி தமிழக அரசு அனல் மின் நிலைங்களை புதிதாக தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பழைய நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களை நிறுத்தி விட்டு புதுபிக்கதக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதன் மூலம், ரூ.4000 கோடி வரையில் லாபம் அடையலாம் என்று க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான் அமைப்பு (Climate Risk Horizon) என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் முனைவர் கிரீஷ் ஸ்ரீமலி மற்றும் முனைவர் அபினவ் ஜிண்டால் ஆகியோர் ஆயுள் முடிந்த அல்லது முடியும் தருவாயில் உள்ள அனல்மின் நிலையங்கள் மற்றும் அதன் சாம்பல் குட்டைகளுக்கான இடம் மற்றும் அதன் கட்டுமானம், தொடரமைப்பு, மின்கல சேமிப்பு ஆகியவற்றின் பகுதிகளில் சூரிய மின்னுற்பத்தி போன்ற புதுப்பிக்கத்த ஆற்றல் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில் மாற்றியமைத்தால் இது சாத்தியம் ஆகும் என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எடுத்துகட்டாக தூத்துக்குடி 1 முதல் 3 நிலை, மேட்டூர் 2வது நிலை, வட சென்னை முதல் நிலை, நெய்வேலி 2 நிலைகள் ஆகியவற்றை தேர்வு செய்து ஆய்வு செய்துள்ளனர். இந்த 4 அனல் மின் நிலையங்களை மொத்தமாக செயலிழக்க செய்வதற்கு ரூ.1300 கோடி செலவாகும் நிலையில், அவற்றை சூரிய மின் ஆற்றல் உற்பத்தி நிலையமாக மாற்றியமைப்பதால் ரூ. 2400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலன் கிடைக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், பழைய அனல்மின் நிலையத்தின் டர்போஜெனரேட்டரை மின் தேக்கியாக பயன்படுத்தினால் ரூ.4000 கோடி வரை பலன் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் நிலங்களையும், மின் தொகுப்பு கட்டமைப்புகளையும் உபயோகிப்பதன் மூலம், சூரிய மின்னுற்பத்தி செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.1.42, மின்கல சேமிப்புடன் கூடிய சூரிய மின்னுற்பத்தி ரூ.2.33 மட்டுமே செலவு ஆகும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், “தமிழ்நாட்டின் எரிசக்தி உற்பத்தி மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, விலையுயர்ந்த, வழக்கற்றுப் போன நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலயங்களை கைவிடுவது அவசியமாகிறது. நிலக்கரி மின்னுற்பத்தி ஆலைகளால் ஏற்படும் காற்று, நீர் மாசு அதிகமாகி வருவதையும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு நீண்ட காலத் தீர்வுகள் குறித்து சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அனல் மின் நிலையங்கள் மூலம் அதிக அளவு காற்று மாசு ஏற்பட்டு மனிதர்களின் வாழ்நாள் குறையலாம் என்று பல ஆய்வுகள் வெளி வரும் நிலையில் தமிழக அரசு படிப்படையாக அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in