திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக 6 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கடல் தீர்த்த கட்டத்திலும், நாழி கிணற்றிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அருகேயுள்ள அமலிநகர் கடற்கரையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்ட பின்னர், திருச்செந்தூர் கோயில் பகுதி கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடற்கரைப் பகுதி பாதியாக சுருங்கிவிட்டது.
கடல் அரிப்பைத் தடுக்க சென்னை ஐஐடி பேராசிரியர்கள் நேரில் பார்வையிட்டு, இது தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அதேபோல, மத்திய கடல் ஆராய்ச்சி மையத்தினரும் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளனர். கடல் அரிப்பைப் தடுக்க ரூ.30 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து கடல் அரிப்பு அதிகரித்து வந்தது. தற்போது, திருச்செந்தூர் கோயில் கடல் முகப்பில் பக்தர்கள் புனித நீராடக் கூடிய இடத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு, 3 அடி முதல் 6 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அருகில் உள்ள மீனவ கிராம மக்கள் கூறும்போது, ‘வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடலில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும்.
அப்போது கடல் அலையின் வேகத்தில் மாற்றம் காரணமாக கடலோரப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்படும். அதே நிலைப்பாடு காரணமாகத்தான் கோயில் பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து, 6 அடி ஆழத்துக்கு பள்ளம் விழுந்துள்ளது.
நாட்கள் செல்லச் செல்ல இது சாதாரண நிலைக்கு மாறிவிடும்’ என்றனர். தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான திருச்செந்தூர் கோயில் முகப்பில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்பு பகுதி கடற்கரையில் கடல் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளம்.