

கோப்புப் படம்
மசினகுடி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மாயாறு அணைப்பகுதியில் வன ஊழியர்கள் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்ட போது மாயார் அணை நீர் பாசனகால்வாய் தடுப்பு கம்பிகளுக்கு இடையே புலிக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
வனச்சரகர் ராஜன், முதுமலைவன கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று புலிக்குட்டியின் உடலை மீட்டனர். வனத்துறையினர் கூறும்போது, “இறந்த பெண்புலிக்குட்டிக்கு ஒரு வயது இருக்கும். மாயாறு அணையில் சிக்கி அடித்து வரப்பட்டு நீர் பாசன கால்வாயில் இறந்து கிடந்தது. உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நீரில் மூழ்கியதால், அதிகளவில் தண்ணீர் குடித்து புலிக்குட்டி உயிரிழந்துள்ளது” என்றனர்.
கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் வன சரகத்திலுள்ள தேவாலா - பந்தலூர் சாலையில் ரிச்மண்ட்பகுதியில் அதிகாலையில் தாயுடன் சாலையை கடக்கும்போது இரண்டு சிறுத்தைக் குட்டிகள் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்து வந்த பந்தலூர் வனச் சரக அலுவலர் சஞ்சீவி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார்.
கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உடற்கூராய்வு செய்த பின்னர் சிறுத்தைக் குட்டிகளின் உடலை எரியூட்டினர்.சிறுத்தை குட்டிகள் மீது மோதிய வாகனத்தை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.