

கோப்புப் படம்
சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் உள்ளிட்ட திடக்கழிவுகளை பெற்று அதனை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த 10-ம் தேதி மட்டும் 43 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 23.9 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டன. இவை கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டன.
இதற்கு 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இச்சேவையை பொதுமக்கள் பெற முன்கூட்டியே மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்யலாம்.
இல்லையெனில், 1913 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் அல்லது மாநகராட்சியின் பிரத்யேக 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பலாம்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள், பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, பாதுகாப்பாகவும் அறிவியல் முறையிலும் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.