

ஒரு அதிகாலைப் பொழுதில் முட்டுக்காடு பாலத்தில் நின்றிருந்தபோது, ஆலாக்கள் ஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பறந்துகொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. கீழே நீரில் நீந்தி வந்த கூழைக்கடாக்கள் பாலம்வரை வந்துவிட்டுத் திரும்பிச் சென்றன. காலைச் சூரிய ஒளியில் துலங்கிய இந்தக் காட்சி, ஓர் ஓவியம்போல் மனதில் தங்கிவிட்டது.
கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதை நம்மில் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். சென்னையில் இருப்பவர்கள், இந்த முறை சுற்றுலா செல்வதோடு சென்னையில் இயற்கையும் பறவைகளும் செழிப்பாக இருக்கும் இடங்களுக்கு ஒரு முறை போய் வரலாம். என்னது சென்னையில் பறவைகளா என்று அவநம்பிக்கைக் கேள்வியை ஒதுக்கி வைத்துவிட்டுக் களத்தில் இறங்கினால் உண்மையை உணரலாம்.
வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு மட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் நீர்நிலைகளுக்கும் வருகின்றன. ஏன், வேடந்தாங்கலைவிட அதிகப் பறவை வகைகளை சென்னை சுற்றுவட்டாரத்திலேயே பார்த்துவிடலாம்.
மிச்சமிருக்கும் பறவைகள்
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள், உள்நாட்டுப் பறவைகள், உள்ளூர் பறவைகள் என்று இருநூறு பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேளம்பாக்கம் உப்பங்கழி, பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, பள்ளிக்கரணை சதுப்புநிலம், அடையாறு கழிமுகம், நன்மங்கலம் காப்புக் காடு, கிண்டி காப்புக் காடு, அடையாறு தியசாபிகல் சொசைட்டி, பழவேற்காடு, புழல் ஏரி போன்ற இடங்களில் பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடியும். இவை தவிர மணப்பாக்கம், வேளச்சேரி, போரூர் போன்ற இடங்களிலும் பறவைகளைப் பார்க்கலாம்.
நகரமயமாதல், மரங்கள் அழிக்கப்பட்டுக் கட்டிடங்கள் பெருகிவிட்டதால் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு கழிமுகத்தில் சாதாரணமாகப் பார்க்க முடிந்த மஞ்சள்மூக்கு ஆட்காட்டி போன்ற சில அரிய பறவைகள் இன்று அந்தப் பகுதிகளில் இல்லாமல் இருப்பது குறைதான். ஆனால், இன்றைக்கும் பறவைகள் சூழ்ந்தே சென்னை காணப்படுகிறது.
கடல் பறவைகள்
சென்னையில் கடல் பறவைகளைப் பார்ப்பதற்கு சிறந்த இடம் கேளம்பாக்கம் உப்பங்கழியும் முட்டுக்காடும். கேளம்பாக்கம் உப்பங்கழியில் கருந்தலைக் கடற்காகம் நீரில் மிதந்தபடியே ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அருகருகில் கூழைக்கடா, சங்குவளை நாரை போன்ற பறவைகள் கற்பனையாக எல்லை வகுத்து இரையைத் தேடிக் கொண்டிருப்பதையும் காண முடியும்.
சிறுதாவூர் ஏரி
சிறுதாவூர் ஏரியில் நீர்ப்பறவைகள் அதிகம் இல்லை என்றாலும், புதர் பறவைகளைப் பார்ப்பதற்குச் சிறந்த இடம் இது. நீர் இல்லாத பகுதியில் இறங்கி நடந்து சென்றால் மஞ்சள்மூக்கு ஆட்காட்டி குரல் கொடுத்துக்கொண்டே தரை இறங்குவதை நோக்கலாம். இது அங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளது. கவுதாரி, புதர் காடை, நெட்டைக்காலி போன்ற பறவைகள் எளிதில் காணக்கூடியவை.
பழவேற்காடு
காலை நான்கு மணிக்குப் புறப்பட்டு சூரிய விடியலில் ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்லும் ஷார் சாலையில் இறங்கி நின்றால், பெரிய ரோஜாக்கள் மலர்ந்திருப்பதைப் போன்ற காட்சியை ஒத்த பூநாரைகள் கூட்டத்தைப் பார்க்கலாம்.
குஜராத் கட்ச் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தெற்கு நோக்கி இப்பறவைகள் வருகின்றன. பூநாரை தவிர ஆலா, உள்ளான் போன்ற பறவைகளையும் இங்கே பார்க்கலாம்.
பெரும்பாக்கம் சதுப்புநிலம்
பழவேற்காட்டுக்குச் செல்ல முடியாதவர்கள், சென்னை நீர்நிலைகளுக்கு வரும் பூநாரைகளைக் கண்டு களிக்கலாம். பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூர் நாலுமுனையில் இடதுபுறம் திரும்பினால், பெரும்பாக்கத்தின் பரந்த சதுப்புநிலம் வந்துவிடும். அதிகப் பறவை வகைகளை பார்ப்பதற்கு ஏற்ற இடம் இது. வட மாநிலங்களில் காணப்படக்கூடிய செண்டு வாத்து இங்கு வரும் ஓர் அரிய பறவை.
பிப்ரவரி மாதத்தில் கோணமூக்கு உள்ளான் பறவை நூற்றுக்கணக்கில் இங்கு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடிய ஊசிவால் வாத்து, தட்டைவாயன் (வாத்து), நீலச்சிறகு வாத்து போன்றவற்றை டிசம்பர்-ஜனவரி மாதத்தில் அதிகமாகப் பார்க்கலாம்.
அதேபோல உள்ளான், பொரி உள்ளான், பவளக்கால் உள்ளான் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. மூன்று வகை மீன்கொத்திகளையும் பார்க்க முடியும். கடந்த மாதத்தில் பெரிய பூநாரை, மீசை ஆலா போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் கூடி ஆச்சரியத்தை கொடுத்தன.
பள்ளிக்கரணை சதுப்புநிலம்
பெரும்பாக்கத்தில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ளது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். பெரும்பாக்கமும் இதன் தொடர்ச்சியே என்றாலும், இடையில் பல கட்டிடங்கள் முளைத்து சதுப்பு நிலங்களைப் பிரித்துவிட்டன. இலைக்கோழி, தாழைக் கோழி, சாம்பல் ஆட்காட்டி, நத்தைகுத்தி நாரை, சாம்பல் நாரை போன்ற பறவைகளைப் பார்ப்பதற்கு ஏற்ற இடம் இது.
அடையாறு கழிமுகம்
அடையாறு கழிமுகத்தை வெளிநாட்டுப் பறவைகளின் விருந்தினர் மாளிகை எனலாம். அடையாறு மேம்பாலத்தில் நின்று பார்த்தாலே பேருள்ளான் பறவைகள் கூட்டம் கூட்டமாகத் தமது நீண்ட அலகைக் கொண்டு இரை தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கொசு உள்ளான் பறவைகள் அந்த இடத்தை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டு தனியாக இரை தேடுகின்றன.
ஆறு மணியளவில் தலையை நிமிர்த்திப் பார்த்தால் பாலூட்டிகளான பழம்தின்னி வௌவால்கள் நூற்றுக்கணக்கில் நம் தலைக்கு மிக அருகிலேயே பறந்து சென்றுகொண்டிருக்கும். அடையாறு கடலில் கலக்கும் இடமருகே கொண்டலாத்தி பறவைகள் தரையில் விளையாடிக் கொண்டிருக்கும். அடையாறு ஆற்றில் இரவு நேரத்தில் பல பறவைகள் கூட்டமாக நின்றுகொண்டே ஓய்வெடுப்பதையும் பார்க்க முடியும்.
நிலப் பறவைகள்
அரசவால் ஈ பிடிப்பான், ஆறுமணி குருவி (பிட்டா), பஞ்சுருட்டான், காட்டு வாலாட்டி போன்ற பறவைகளை தியசாபிகல் சொசைட்டி, கிண்டி காப்புக் காடு, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பதிவு செய்யலாம்.
ஆந்தைகளைப் பார்க்கச் சிறந்த இடம் நன்மங்கலம் காப்புக் காடு. மாலை வேலையில் சென்றால் இரவு வேட்டைக்கு ஆந்தைகள் இறக்கை அடித்துத் தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதிலும் முக்கியமானது கொம்பன் ஆந்தை
காரப்பாக்கம் சரணாலயம்
காரப்பாகத்தில் புதிய பறவைகள் சரணாலயத்தை வனத்துறை உருவாக்கி வருகிறது. நீர்க்காகம், பெரிய கொக்கு, பாம்புத்தாரா, சங்குவளை நாரை போன்ற நீர்ப்பறவைகள் இங்கு உள்ளன.
இங்கு வரும் பறவைகளைப் பற்றிப் பார்வையாளர்கள் அறிவதற்குக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த குளிர் காலத்தில் இந்தச் சரணாலயம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி சென்னைக்கு உள்ளேயே இருநூறுக்கும் மேற்பட்ட பறவை வகைகளைப் பார்க்க முடிகிறது. அதேநேரம் பறவைகளின் வாழிடங்கள் பெரும் அளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய ஏரிகள் தொண்ணூறு சதவீதம் அழிவுக்கு உள்ளாகியுள்ளன.
பெரும்பாக்கம் சதுப்பு நிலமும் அழிந்து வருகிறது, பள்ளிக்கரணை அசுத்தமாக மாறி வரும் காட்சியைப் பார்க்க முடிகிறது. இன்றைக்குச் சென்னை பறவைகள் சூழ்ந்து இருந்தாலும், எதிர்காலத்திலும் இதே நிலை தொடருமா என்ற சந்தேகம் வலுக்கவே செய்கிறது.
கட்டுரையாளர், இயற்கை செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: lapwing2010@gmail.com