

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கிய கள்ளங்காடு பகுதி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை ஆய்வுக்குழுவினரால் இப்பகுதியில் உள்ள பண்பாடு மற்றும் பல்லுயிரிகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
இதில் இங்கு பழமையான கோயில் காடுகள் உள்ளதும், இங்கு உசிலை, குருந்தம், விடத்தலை, களா, காரை, ஆத்தி, ஆலம், அரசம், தைலம், குறிஞ்சி, திருகுகள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி உள்ளிட்ட தாவரங்கள் பெருமளவில் காணப்படுகிற தகவல் வெளியானது.
மேலும், அரியவகை உயிரிகளான தேவாங்கு, நரி,உடும்பு, காட்டுப்பூனை, மரநாய், கீரி, அணில்,குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகளுக்கும் இக்காடுகள் வாழிடமாக விளங்கி வருவதும் தெரிய வந்தது. கூடுதலாக சில மாதங்களுக்கு முன்பு மான்களும் வாழ்வதாக பொதுமக்கள் கூறி வந்தனர்.
மான்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக புள்ளிமான்கள் கள்ளங்காட்டில் உள்ள சாலையில் துள்ளிக் குதித்து ஓடி கடக்கும் காணொலியை இளைஞர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இப்பகுதியில் ஏற்கெனவே சிப்காட் அமைக்கப் படுவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு அதற்காக சாலை வசதிகள் அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை நாகப்பன்சிவல்பட்டி, மூவன்சிவல்பட்டி, கண்டுப்பட்டி, தாயம்பட்டி, கம்பாளிப்பட்டி, நெல்லுக்குண்டுப்பட்டி, ஒத்தப்பட்டி, முத்தம்பட்டி, முறவக்கிழவன்பட்டி, நல்ல ஷசுக்காம்பட்டி, பெரியசிவல்பட்டி, சொக்கக்கிழவன்பட்டி உள்ளிட்ட கிராமமக்கள் இணைந்து தடுத்து நிறுத்தினர்.
சிப்காட் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள விவசாயம், நீராதாரங்கள், மேய்ச்சல் நிலங்கள், தொல்லியல் சின்னங்கள், வழிபாட்டு அம்சங்கள், கோயில்காடுகள் சிதைக்கப்பட்டு, பல்லுயிரிகளும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதை சுட்டிக்காட்டி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கள்ளங்காடு பகுதியின் பண்பாடு மற்றும் பல்லுயிர்கள் நோக்கில் முக்கியத்துவம் நிறைந்ததாக உள்ளதால், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பல்லுயிரி மரபுத்தலமாக அறிவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டி கள்ளங்காடு சுற்றுவட்டார பாதுகாப்புக்கான 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டும் வந்தன. இங்கே புள்ளி மான்கள் வாழ்வது கண்டறியப்பட்ட தகவல் இப்பகுதியின் பல்லுயிரிய முக்கியத்துவத்துக்கு கூடுதலாக சான்று தருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.