

சேலம் சிவதாபுரம் அம்மன் நகரில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெய்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அப்போது மழை நீர் குடியிருப்பு அருகே சூழ்ந்தது. அப்போது முதல் அப்பகுதி மக்கள் நோய்களால் அவதியுற்று வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்தும் காலியிடத்தில் தேங்கி இருக்கும் நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் அருகே சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சேலத்தில் எப்பொழுது மழை பெய்தாலும் அதிகளவு பாதிக்கப்படும் பகுதியாக சிவதாபுரம் விளங்கி வருகிறது. சிவதாபுரத்தின் அருகே உள்ள சேலத்தாம் பட்டி ஏரியில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேறும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். தாழ்வான பகுதியாக உள்ளதால் மழை பெய்யும் போது, சிவதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பெரும் அவதிக்குள்ளாக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த இரண்டு ஆண்டாக இரண்டு ஏக்கருக்கும் மேலான காலி நிலத்தில் மழை நீர் தேங்கி நின்று, கொசு, பூரான், தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது. அசுத்தமான நீரால் நோய் பரவி, அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர். தேங்கியுள்ள அசுத்தமான நீரை அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காததால், பொதுமக்கள் கடுமையாக கொதிப்படைந்துள்ளனர்.
உடனடியாக சிவதாபுரம் அம்மன் நகரில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை வெளியேற்றி, நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து. அப்பகுதி மக்கள் கூறும்போது, சிவதாபுரம் அம்மன் நகரில் பல ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இரண்டு ஆண்டுக்கு முன்பு பெய்த மழை நீரால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அப்போது, ஊருக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், அம்மன் நகரில் இரண்டு ஏக்கருக்கு மேலான காலி நிலத்தில் மழை நீர்தேங்கி நின்றது. இந்த நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசுத்தமான நீரில் உருவாகும் கொசுக் கடியால் பலரும் நோய் பாதிப்புக்கு உள்ளாகி அவதியுற்று வருகின்றனர். அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு குழந்தைகளும், முதியவர்களும் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விஷ ஜந்துகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும்போது, அந்த நேரத்தில் மோட்டார் வைத்து சிறிதளவு தண்ணீரை வெளியேற்றி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இங்கு தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, பாதுகாப்பான முறையில் குடியிருப்பு வாசிகள் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.