

விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிமனைக்கு பசுமை கட்டிட தரநிலைகளுக்கான ‘ஐஜிபிசி’ என்ற தங்க மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான நிலைக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சர்வதேச, இந்திய அளவில் மதிப்புமிக்க பல்வேறு விருதுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், விம்கோ நகர் பணிமனைக்கு பசுமை கட்டிட தர நிலைக்களுக்கான ‘ஐஜிபிசி’ என்ற தங்க மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிமனை மதிப்புமிக்க தங்க மதிப்பீட்டு சான்றிதழை இந்திய பசுமை கட்டுமான கவுன்சிலிடமிருந்து (ஐஜிபிசி) பெற்றுள்ளது. பணிமனையின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளை எடுத்துக்காட்டும் வகையில் பசுமை தொழிற்சாலை கட்டிடம் பிரிவின் கீழ் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல் கட்டம் மற்றும் முதல் கட்டம் நீட்டிப்பில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச் சான்றிதழை ஏற்கெனவே பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விம்கோ நகர் பணிமனையானது 33,918 சதுர மீட்டர் பரப்பளவில் உயர்மட்ட வழித் தடத்தில் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில்களை பராமரிப்பது உட்பட 16 ரயில் பாதைகள், உடற்பயிற்சிக் கூடம், பயிற்சி வசதி மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் இந்த பணிமனை கட்டப்பட்டுள்ளது. மேம்பட்ட நீர் சேமிப்பு, நிலையான தள மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.