

புதுடெல்லி: டெல்லி மாநகரில் பசுமைப் பரப்பை வலுப்படுத்தவும், நகர்ப்புற பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், 2024-25-ம் ஆண்டில் சிறுத்தை, பாம்புகள், நீலமான், குரங்குகள், மயில்கள், பறவை இனங்கள் உட்பட 1,370 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக பிரத்யேகமான பசுமை உதவி எண் போர்ட்டலை டெல்லி அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
பொதுமக்கள் இதன் வாயிலாக புகாரளிக்கலாம். பசுமை பரப்பு விரிவாக்கத்துக்காக 5,03,672 மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 2 லட்சம் மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு ஹெக்டேர் பரப்பளவில் மியாவாக்கி காடுகளை உருவாக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.