

கூடலூர் வனப் பகுதிகளில் யானைகள் ஊருக்குள் ஊடுருவாமல் இருக்க அதிநவீன தெர்மல் கேமரா ட்ரோன்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இதனால் யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறும் போது ஒலி எழுப்பும் வகையில் எச்சரிக்கை ஒலி அமைப்புகளை வனத்துறையினர் நிறுவியுள்ளனர்.
அதேபோல் ஊருக்குள் வரும் யானைகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, வனத்துறையினர் அவற்றை விரட்டி வருகின்றனர். ஆனால், இரவு நேரத்தில் ஊருக்குள் யானைகள் வருவதை கணிக்க முடியாத நிலையில் வனத்துறையினர் இருந்தனர். தற்போது இரவு நேரத்திலும் கண்காணிக்கும் வகையில் அதி நவீன தெர்மல் ட்ரோன் கேமராக்களை வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கூடலூர் வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் பிரபு கூறியதாவது: தெர்மல் ட்ரோன் கேமராக்கள் மூலம் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை முன்கூட்டியே அறிந்து கண்காணித்து தடுக்க முடியும். இரவு நேரத்தில் தெர்மல் ட்ரோன் மூலம் துல்லியமாக காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.
அதேபோல் ட்ரோன் மூலம் பெறப்படும் தரவுகள், வனவிலங்குகளின் பழக்க வழக்கங்களை புரிந்து கொள்வதோடு, முன்கூட்டியே பாதுகாப்பு திட்டங்களை வகுக்கவும் பயன்படும். மேலும், வனப்பணியாளர்கள் யானைகளின் நடமாட்டத்தை அறிந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மனித- விலங்கு மோதலை தடுக்க முடியும், என்றார்.