Last Updated : 11 Jun, 2025 02:33 PM

 

Published : 11 Jun 2025 02:33 PM
Last Updated : 11 Jun 2025 02:33 PM

ஓசூர் காவிரி பகுதியில் வலசை வந்துள்ள பட்டாம்பூச்சிகள்!

ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி ஆறு மற்றும் ஈர நிலப்பகுதிகளில் வலசை வந்துள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், பிலுகுண்டுலு, ராசிமணல் பகுதியைப் பட்டாம்பூச்சிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் வனக்கோட்டம் 1,492 சகிமீ பரப்பளவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் மற்றும் வனவிலங்குகள், 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள், அழிந்து வரும் அரியவகை பட்டாம் பூச்சிகள் உள்ளன. இந்த வனப் பகுதியின் மையப் பகுதியில் காவிரி ஆறு பாய்வதால், வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் காவிரி வடக்கு மற்றும் தெற்கு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து லட்சக் கணக்கான பட்டாம்பூச்சிகள் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன. இதனிடையே, இவை வனச்சாலையைக் கடக்கும்போது, வாகனங்கள் மீது மோதி உயிரிழக்கும் நிலையுள்ளது. எனவே, இவற்றைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பட்டாம் பூச்சி ஆர்வலர் செந்தில்நாதன் கூறியதாவது: தமிழகத்தில் 328 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாக பட்டாம்பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, தாவரங்களின் அயல் மகரந்த சேர்க்கைக்கும், தாவர இனப்பெருக்கம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகின்றன. பட்டாம்பூச்சிகளின் லார்வாக்கள் பறவைகள், பல்லிகள் மற்றும் சிலந்திகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளுக்கு உணவு ஆதாரத்தை வழங்குகின்றன.

பருவநிலை மாற்றங்கள், வானிலை முறைகள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் குளிர்காலத்தைக் கழிக்கும் வாழ்விடங்களைத் தேடி பட்டாம்பூச்சிகளில் வலசை நடைபெறுகிறது. இந்தியாவில் இவை குழுக்களாக இடம்பெயர்கின்றன, தென்னிந்தியாவில் இரண்டு முறை இடம்பெயர்வுகள் நடக்கின்றன. தென்மேற்கு பருவமழைக்கு முன்னர் ஏப்ரல்-ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம் பெயர்வு இருக்கும். தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஓசூர் வனக்கோட்டத்துக்கு கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன.

அழிவின் விளிம்பில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாக்க, வலசைக் காலங்களில் பயிர்களுக்குப் பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பதைத் தவிர்க்க விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பட்டாம்பூச்சிகளைக் கவர ஈர நிலப்பகுதிகளில் மலர்ச் செடிகளை நடவு செய்ய வேண்டும். மேலும், அஞ்செட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட பிலிகுண்டுலு, ராசிமணல் காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஈரப்பதமான பகுதியைப் பட்டாம்பூச்சிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x