

குமுளி அருகே ஏலக்காய் தோட்டத்தில் உள்ள 15 அடி குழியில் விழுந்து கிடந்த நாய் மற்றும் புலியை வனத்துறையினர் மீட்டனர்.
தமிழக கேரள எல்லையான குமுளி அருகே செல்லாறு கோவில்மெட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சன்னி என்பவரது ஏலக்காய் தோட்டத்தில் 15 அடி குழி ஒன்று இருந்தது. இதில் நேற்று நாய் ஒன்றின் குரைப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அருகில் இருந்தவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தனர். அங்கு புலியும், அதற்கு அருகில் நாய் ஒன்றும் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இடுக்கி மாவட்ட வன அலுவலர் வினோத்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பெரியாறு புலிகள் காப்பக மருத்துவர் அனுராஜ் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்டார். பின்பு கூண்டில் அடைக்கப்பட்ட புலி கவி எனும் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. இதேபோல் நாயையும் மீட்டு அதன் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், புலிக்கு 3 வயது ஆகும். நாயை விரட்டி வந்தபோது இந்த குழியில் நாயும், புலியும் விழுந்திருக்கலாம். இந்த அதிர்ச்சியில் புலி நாயை தாக்கவில்லை. நாய் தொடர்ந்து குரைத்ததால் அருகில் உள்ளவர்கள் இதைப் பார்த்து தகவல் தெரிவித்தனர், என்றனர்.