மேலூரில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது: ஆட்சியரிடம் மக்கள் மனு

மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மேலூரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: மதுரை மேலூர் பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது. இதனால் தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாபட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள் அகதிகளாகும் சூழல் உள்ளதால் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் ரா.சா.முகிலன் தலைமையில் கிராம மக்கள் இன்று (நவ.18) மனு அளித்தனர்.

அந்த மனுவின் விவரம்: கடந்த நவ.7-ல், ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் என்ற பெயரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ஏலம் எடுத்துள்ளது. இதனால் தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர் பட்டி எனும் 10 கிராம மக்கள் அகதிகளாகும் நிலை உள்ளது.

அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் மண்டலம், சமணப்படுகை, குடவரை கோயில், தொல்லியல் சின்னங்கள், அழகர் மலை வனப்பகுதி முழுமையாக அழிக்கப்படும் சூழல் உள்ளது. மதுரை மாவட்டம் ஏற்கெனவே கிரானைட் குவாரிகளால் எண்ணற்ற பாதிப்புகள் அடைந்துள்ளன. இஸ்ரோ நிறுவனம் இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயகரமான 147 இடங்களில் தமிழகத்தில் ஆறு இடங்கள் என அறிவிக்கப்பட்டதில் மதுரையும் உள்ளது. இத்தகைய பாதிப்புகளோடு, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் டங்ஸ்டன் கனிமச் சுரங்கங்களை மேலூரில் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு கொள்கை ரீதியாக செயல்படுவதுபோல், டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிராகவும் செயல்பட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும், என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதாவிடம் மனு அளித்தனர். அப்போது அவர் கூறுகையில், “இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு வரவில்லை. இது குறித்து கனிமவளத் துறை மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in