முல்லைப் பெரியாறு மாசடைவதை தடுத்தால் ரூ.2,500 பரிசு: கேரள பஞ்சாயத்தில் அறிவிப்பு

வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தை கடந்து செல்லும் முல்லைப் பெரியாறு. | படம்:என்.கணேஷ்ராஜ்.
வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தை கடந்து செல்லும் முல்லைப் பெரியாறு. | படம்:என்.கணேஷ்ராஜ்.
Updated on
1 min read

குமுளி: முல்லைப் பெரியாற்றில் குப்பைகளை கொட்டினால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறல்களை வீடியோவாக எடுத்து அனுப்புவர்களுக்கு ரூ.2,500 வெகுமதியும் அளிக்கப்படும் என்றும் கேரள மாநிலத்தில் உள்ள வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இதன் மதகுகள் வழியே கேரளப்பகுதிகளுக்கு நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து இடுக்கி அணையை சென்றடைகிறது. நீர் தேக்கத்தின் பின்பகுதியில் இருந்து சுரங்கம் மற்றும் குழாய் மூலம் தமிழகப் பகுதிக்கு பாசனம்மற்றும் குடிநீருக்காக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

கேரளப் பகுதியில் பெரியாறு நீர் கடந்து செல்லும் வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து சபரிமலை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது. மேலும் தேக்கடி, வாகமண் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மிக அருகிலும் உள்ளது. தேயிலை, காப்பி பயிர்கள் நிறைந்த எஸ்டேட் பகுதிகள் இங்கு அதிகம். இந்நிலையில், வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தை குப்பை இல்லாத பகுதியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி குப்பைகளை எரித்தல், கழிவுநீரை பொதுவெளியில் விடுதல், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுவது, சட்டவிரோதமாக குப்பைகளை கொண்டு செல்லுதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியாறு போன்ற நீர்நிலைகளில் குப்பைகளை வீசி மாசுபடுத்தினால் ரூ.2 லட்சம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் தீர்மானித்துள்ளது.

இதற்காக பஞ்சாயத்து முழுவதும் பெரியாற்றை காப்போம் என்பதை முன்னுறுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் உஷா, செயலாளர் ஆர்.அசோக்குமார் ஆகியோர் கூறுகையில், குப்பை இல்லாத பகுதியாக மாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிமுறை மீறல்களை வீடியோ அல்லது புகைப்படமாக வழங்குபவர்களுக்கு ரூ.2,500 வெகுமதியாக அளிக்கப்படும். இது போன்ற பதிவுகளை97461 00378, 92879 22000 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in