மஞ்சூர்- கெத்தை சாலையில் அரசுப் பேருந்தை மறித்த யானைகள்: போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் அரசுப் பேருந்தை மறித்த யானைகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை சாலையில் அரசுப் பேருந்தை மறித்த யானைகள்
Updated on
1 min read

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் கெத்தை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. திங்கள்கிழமை அரசுப் பேருந்து ஒன்றை அந்த யானைகள் வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை, முள்ளி, மானார், மேல்முள்ளி உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிகளை சுற்றிலும் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பில் வாழை மற்றும் மலை காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் யானைக்கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து வாழை மற்றும் காய்கறி பயிர்களை நாசம் செய்கின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மஞ்சூர் - கோவை சாலையில் ஒக்க நாடு பகுதியில் யானை கூட்டம் ஒன்று குட்டிகளுடன் திடீரென மஞ்சூர்-கெத்தை சாலையின் குறுக்கே நின்றன. அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து தடைபட்டதால் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்தன. நீண்ட நேரத்துக்குப் பின், யானைகள் வனப் பகுதிகளுக்குள் சென்றன. அதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “மஞ்சூர் - கோவை பிரதான சாலையில் யானை நடமாட்டம் இருப்பதால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது. வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும். கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in