

ஓசூர்: அஞ்செட்டி வனப்பகுதியையொட்டிய சாலைகளில் பொதுமக்கள் வீசும் தின்பண்டங்களுக்காக வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலையோரங்களைக் குரங்குகள் வாழ்விடமாக மாற்றியுள்ளன.
ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி ஆகிய வனப்பகுதிகளில் யானைகள், மான், காட்டெருமை, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
தண்ணீர் தொட்டிகள்: தற்போது, வனப்பகுதியில் நிலவும் வறட்சி மற்றும் வெப்பக் காற்று காரணமாக வனப்பகுதியில் விலங்குகளுக்குத் தேவையான குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் நிரப்பப் படுகிறது. இதனிடையே, அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையோரங்களில் பயணம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குரங்குகளுக்குக் கருணை அடிப்படையில் வழங்கும் உணவு மற்றும் தின்பண்டத்தால் குரங்குகள் கூட்டம், கூட்டமாகச் சாலையோரங்களை வாழ்விடமாக மாற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழக்கும் நிலை: இவ்வாறு சாலையில் சுற்றித் திரியும் குரங்குகள் பல நேரங்களில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. மேலும், மின் வேலிகள், விஷக்காய்களை சாப்பிட்டும் உயிரிழக்கும் நிலையுள்ளது.
இது தொடர்பாக வன விலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: வனப்பகுதியில் குரங்குகளின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பழ மரங்கள் இல்லை. இதனால், குரங்குகள் வனத்தை விட்டு வெளியேறி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், வனப்பகுதிக்குச் செல்லாமல் சாலையோரங்களில் உணவுக்காகக் காத்திருக்கின்றன.
உணவு வழங்கக் கூடாது: தற்போது, நிலவும் வறட்சியால் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சாலையோரங்களை வசிப்பிடமாக்கி வருகின்றன. பொதுமக்கள் யாரும் சாலைகளில் குரங்குகளுக்குக் கருணை அடிப்படையில் உணவுகள் வழங்கக் கூடாது என வனத்துறை எச்சரித்துள்ள நிலையில், தற்போது, பொதுமக்கள் உணவு வழங்குவது குறைந்துள்ளது. குரங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் அதிக அளவில் பழ வகை மரங்களை நடவு செய்து பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன் போக்கில் வாழ விட வேண்டும் - வனத்துறையினர் கூறியதாவது: குரங்குகள் கூட்டம், கூட்டமாக வாழக் கூடியது. தங்கள் கூட்டத்துக்குள் ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு வாழ்பவை. குரங்குகளை அதன்போக்கில் வாழ விட வேண்டும். குரங்குகளுக்கு நாம் எதுவும் கொடுக்கக் கூடாது. சாலையோரங்களில் பொதுமக்கள் வீசும் உணவு மற்றும் தின்பண்டத்தால், அவை நம்மோடு வாழப் பழகி வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்து, உணவுக்காகச் சாலையோரங்களில் காத்திருக்கின்றன.
குரங்குகள் தங்களுக்குத் தேவையான உணவுகளைத் தாமே தேடிக் கொள்ளும் தன்மை கொண்டவை. எனவே, குரங்குகளுக்கு நாம் உணவு அளிப்பதை தவிர்த்தால், அவை அதன் வாழ்விடத்தில் எந்த குறையும் இல்லாமல் வாழும். நாம் உணவு அளித்தால், நம் வாழ்வியலில் அவை தொல்லை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.