

ஈரோடு: ஈரோட்டில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை நெடுஞ்சாலைத்துறை வெட்டிச் சாய்த்ததால், ஒதுங்க நிழலின்றி வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
ஈரோட்டில் மார்ச் முதல் தேதியே 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில் தற்போது அதிக வெப்ப பதிவில் தமிழக அளவில் முதலிடமும், தேசிய அளவில் மூன்றாமிடமும் ஈரோடு பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் மொத்த பரப்பளவில், 39 சதவீதம் வனப்பகுதியாக உள்ள நிலையில், இங்கு வெப்பம் அதிகரிக்க காரணம் தெரியாமல் ஈரோடு மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்து வரும் நாட்களில் ஈரோட்டின் வெப்பநிலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஒதுங்க நிழல் இல்லை: இந்நிலையில் ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால் சாலையோரங்களில் நிழலுக்கு ஒதுங்க கூட வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது: ஈரோடு நகரில் கடந்த எட்டு மாதங்களில் ஈவிஎன் சாலை, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரங்கள் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
இதேபோல, கடந்த ஒரு மாதத்தில், பெருந்துறை சாலையில், டீச்சர்ஸ் காலனி முதல் திண்டல் வரையிலான சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.
இதனால், நகரின் எந்த சாலையில் பயணித்தாலும், ஒதுங்குவதற்கு நிழல் தரும் ஒரு மரம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.
தகவல் உரிமைச் சட்டம்: இதனிடையே, ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரையிலான சாலை விரிவாக்கத் துக்காக ஆயிரக் கணக்கான மரங்கள் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, சித்தோடு முதல் கோபி வரையிலான சாலை விரிவாக்கத்துக்காக பூவரசு, வாகை, வேம்பு உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 3,532 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைத்துறை பதில் அளித்துள்ளது.
ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் வரையிலான சாலை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் வகையில், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில், சின்னப்பள்ளம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் 950 மரங்கள் வெட்டப்பட்டன. இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க 104 மரங்கள் கடந்த மாதம் வெட்டப்பட்டுள்ளன.
வெள்ளை அறிக்கை வேண்டும்: இதுகுறித்து பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது:
சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டும் போது, ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரக் கன்றுகள் நடப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து வருகிறது. ஆனால், அவ்வாறு நடப்படுகிறதா என்பதை யாரும் கண்காணிப்பதில்லை.
எப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றனவோ, அப்பகுதியைச் சேர்ந்த சூழல் ஆய்வாளர்கள், மக்கள் நலப் பிரதிநிதிகள் கொண்டு குழுவை அமைத்து, அவர்கள் அனுமதியுடன் மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கு மாற்றாக மரக்கன்றுகள் நடப்படுவதை அக்குழுவினர் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, அதற்கு மாற்றாக வைக்கப்பட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை, வைக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும், என்றார்.