Last Updated : 30 Apr, 2024 05:41 AM

 

Published : 30 Apr 2024 05:41 AM
Last Updated : 30 Apr 2024 05:41 AM

கோடை வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு - ஓசூரில் ‘புத்துயிர் பெருமா’ மழை நீர் சேகரிப்பு திட்டம்?

ஓசூர் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் மழை நீர் வழிந்தோட தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மழை நீர் சேகரிப்புத் தொட்டி இல்லாததால், மழை நீர் நிலத்தில் விழுந்து வீணாகும் நிலையுள்ளது.

ஓசூர்: ஓசூரில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓசூர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தொழிற் சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்ததைப் போல, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. இதனால், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு, வான் உயரக் கட்டிடங்கள் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு: ஓசூர் பகுதி தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் தண்ணீர் தேவையை நிலத்தடி நீராதாரங்களே பல ஆண்டுகளாகப் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குக் கடந்த ஒரு மாதமாக ஓசூர் பகுதியில் வெயில் உக்கிரம் அதிகரித்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழ் சென்று விட்டது. இதனால், ஓசூர் நகரப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

வீணாகும் மழை நீர்: இதுதொடர்பாக சமூக ஆர்வலர் சதீஷ் மற்றும் சிலர் கூறியதாவது:

மழை நீரை வீணாக்காமல் சேமித்தாலே மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் மூலம் பாசனம் மற்றும் வணிக நிறுவனங்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியும்.

இதை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2001-ம் ஆண்டு அரசு அனைத்துக் கட்டிடங்களிலும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பைக் கட்டாயமாக்கியது. இதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் முதல் குடியிருப்புகள் வரையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்க அரசு அதிக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை.

பராமரிப்பில் அக்கறை இல்லை: இதனால், ஏற்கெனவே அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அமைக்கப் பட்டிருந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்பின்றி வீணாகியுள்ளது.

மேலும், புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் பெயரளவுக்கு மட்டும் மழை நீர் சேகரிப்பு திட்டம் உள்ளது.

ஓசூர் நகரப் பகுதியில் பெய்யும் மழை நீரை முறையாகச் சேமிக்க தவறியதால் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, இதைச் சமாளிக்க முடியாமல் மக்களும், மாநகராட்சி நிர்வாகமும் திணறி வருகிறது.

வரும் மழைக் காலங்களில் மழை நீரைச் சேமிக்க பொதுமக்கள் மத்தியில் மழை நீர் சேமிப்புத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே அரசு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்களில் மழை நீர் கட்டமைப்பு அமைப்பதை கட்டாயமாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x