

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மகசூல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 10 சதவீதம் மாங்காய்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விவசாயத்தை நேரடியா கவும், மறைமுகமாகவும் ஆயிரக் கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதமாக போதிய மழை பெய்யவில்லை. இதேபோல், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
நீர்மட்டம் சரிவு: தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், நீர்நிலைகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. இந்நிலையில் மா விவசாயிகள், டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி மாமரங்களை காக்க போராடி வருகின்றனர். தற்போது மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாங்கூழ் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும், மாவிற்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய அரசு முன் வர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மா விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது. இதனால் மாமரங்கள் காய்ந்து வருகின்றன. மா மகசூல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவிவசாயிகளுக்கும், மாமரங் களுக்கும் இது பேரிடர் காலமாக மாறி உள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மானாவாரி மா சாகுபடியாளர்கள் கூலி வேலை செய்தும், நகைகளை அடகு வைத்தும், டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்களுக்கு ஊற்றி வருகின்றனர்.
ஒரு ஏக்கரில் உள்ள மாமரங்களுக்கு தண்ணீர் ஊற்ற, ஒரு முறைக்கு ரூ.7 ஆயிரம் செலவாகிறது. இதேபோல் பலமுறை தண்ணீர் ஊற்றி மாமரங்களை காப்பாற்ற வேண்டி உள்ளது.
மழையை நம்பியே... மானாவாரி மா விவசாயிகள் 80 சதவீதம் மழையை நம்பியே உள்ளனர். மாமரங்களை காப்பாற்ற போராடும் மாவிவசாயிகளுக்கு டிராக்டரில் இலவசமாக தண்ணீர், இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், 90 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 சதவீதம் உள்ள மாங்காய்களுக்கு உரிய விலையை அரசு பெற்றுத் தர வேண்டும்.
தற்போது, மா கொள்முதல் செய்ய தொடங்க உள்ளதால், மாவிற்கு ஆரம்ப விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.50 பெற்று தர வேண்டும். வழக்கம்போல், மாவிவசாயிகளை மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் வஞ்சிக்கக் கூடாது. தமிழக அரசு மாவிவசாயிகளை காக்க முன்வர வேண்டும், என்றார்.