

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பலால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தினமும் 23 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் நிலக்கரியை பொடியாக்கி, கொதிகலனில் செலுத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் அதிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகையை, கரி பிரிப்பான் இயந்திரம் மூலமாக சாம்பலை தனியாக பிரித்து, சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
இதனிடையே, அனல் மின் நிலைய 2-வது பிரிவில், கொதிகலன் டியூப் வெடித்ததில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. அதேபோல, சாம்பல் துகளை சேகரித்து வைக்கும் கிடங்கிலும் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. அப்போது, கிடங்கில் இருந்து சாம்பல் துகள்கள் அதிகளவில் வெளியேறி காற்றில் பரவியது. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். எனவே, பாதுகாப்பான முறையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.