

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடைப்பேரி கண்மாய் அருகே நெல் பயிர்களை ருசி கண்ட யானை கூட்டம், தினசரி வயல்களுக்கு வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சடைப்பேரி கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் இரண்டாம் போக சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது நெற்பயிர்கள் குலை விட்டு, பால் பிடித்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் நெற்பயிர்களை சாப்பிட்டு விட்டு சென்றது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்த விவசாயிகள், இரவு நேரத்தில் வயலுக்கு காவலுக்கு சென்றனர்.
மறுநாளும் யானை கூட்டம் வயல்களுக்கு வந்த போது, வனத்துறையினருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். யானைகள் மலையடிவார பகுதிகளிலேயே முகாமிட்டு உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: “உணவு மற்றும் நீருக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்தும். கடந்த சில நாட்களுக்கு முன் தேவதானம் மாலை அடிவாரத்தில் உள்ள தென்னை தோட்டத்திற்குள் காட்டு யானை கூட்டம் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
நச்சாடைப்பேரி கண்மாய் பாசன வயல்களில் இதற்கு முன் மான், காட்டுப்பன்றி ஆகிய விலங்குகள் தான் வரும். வயல்களில் துணிகளை கட்டி, தனியாக சென்று சத்தமிட்டும் விரட்டி விடுவோம். ஆனால் தற்போது முதல் முறையாக காட்டு யானைகள் நெல் வயல்களுக்கு புகுந்து உள்ளது.
யானைகள் தினசரி வருவதால் 10 மேற்பட்ட விவசாயிகள் தினசரி இரவு காவலுக்கு செல்கிறோம். ஒரு நாள் மட்டும் வந்த வனத்துறையினர், அதன்பின் பட்டாசுகளை கொடுத்து விட்டு, விரட்டுமாறு கூறி விட்டு சென்று விட்டனர். யானைகள் வயக்களுக்குள் புகுந்தால் பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்பதால், தினசரி இரவில் பிரம்மாண்ட விளக்குகளை(போகஸ் லைட்) எரிய விட்டு அச்சத்துடன் காவல் இருந்து வருகிறோம்” என்றனர்.