Last Updated : 02 Mar, 2024 06:35 AM

 

Published : 02 Mar 2024 06:35 AM
Last Updated : 02 Mar 2024 06:35 AM

பர்கூரில் குப்பை தொட்டியாக மாறிய ‘பாம்பாறு’ - கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் மக்கள் அவதி

பர்கூர் - திருப்பத்தூர் சாலையில் உள்ள பாம்பாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பதால், சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது

கிருஷ்ணகிரி: பர்கூர் பாம்பாற்றில் குப்பை, பிளாஸ்டிக் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு அடிக்கடி தீயிட்டு எரிப்பதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் குப்பம் வனப்பகுதிகளில் வெளியேறும் மழைநீர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஓதிக்குப்பம் ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஓதிகுப்பம் ஏரி 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் இடத்தில் பாம்பாறு கால்வாய் தொடங்குகிறது.

இக்கால்வாய் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்கள் வழியாக பாம்பாறு அணையை சென்று அடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மையால் பாம்பாறு கால்வாய் பயனற்று காணப்பட்டது. இதனால் பாம்பாற்றில் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து சுருங்க தொடங்கியது.

மேலும், பர்கூர் நகர பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாம்பாற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அடிக்கடி தீயிட்டு எரிப்பதால், அப்பகுதியில் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 40 கி.மீ தூரம் ஓடும் பாம்பாறு மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. நீர்வரத்து இல்லாததால் பாம்பாறு குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.

பர்கூர் நகரப் பகுதிகளில் இருந்து குப்பைகள் இங்கே கொட்டப்பட்டு தீயிட்டு கொள்ளுத்துவதால், அதில் இருந்து வெளியேறும் புகை, அப்பகுதி முழுவதும் படர்ந்து பனிமூட்டம் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அவ்வழியேச் செல்லும் சாலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.

எனவே, பாம்பாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, தொடர்புடைய துறையினர் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றுப்பாதையை ஆக்கிரமிப் பதை தடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x