சுவரில் ஏறி விடிய விடிய உறங்கிய புலி - உ.பி. கிராமத்தில் கவனம் ஈர்த்த ‘சம்பவம்’

உ.பி. அட்கோனா கிராமத்தில் சுவரில் படுத்துறங்கிய புலி
உ.பி. அட்கோனா கிராமத்தில் சுவரில் படுத்துறங்கிய புலி
Updated on
1 min read

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறி கிராமம் ஒன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்த புலியை நீண்ட போராட்டத்துக்கு பின்பு வனத்துறையினர் பிடித்து கிராமத்தில் இருந்து வெளியேற்றினர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் புலிகள் காப்பகம் ஒன்று உள்ளது. இங்கிருந்து திங்கள்கிழமை வெளியேறிய புலி ஒன்று நள்ளிரவில் காளிநகருக்கு அருகில் உள்ள அட்கோனா கிராமத்துக்குள் நுழைந்தது. அளவில் பெரிய வித்தியாசமான விலங்கு ஒன்று கிராமத்துக்குள் நுழைந்ததைப் பார்த்த தெரு நாய்கள் வழக்கத்துக்கு மாறாய் குறைத்து கிராமத்தினரை எச்சரிக்கை செய்தன. என்றாலும் கிராமத்துக்குள் நுழைந்த புலியும் எவ்விதமான அட்டகாசமும் செய்யாமல் அங்குள்ள ஒரு வீட்டின் சுவர் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டது.

இரவில் ஊருக்குள் நுழைந்து சுவர் ஒன்றில் ஏறி படுத்துறங்கும் புலியால் தூக்கம் தொலைத்த கிராமத்தினர் புலி இருக்கும் இடத்துக்கருகில் வீட்டின் கூரைகள், உயரமான இடங்களில் ஏறி இரவு முழுவதும் பீதியுடன் புலியை வேடிக்கையும் பார்த்தனர். ஊருக்குள் புலி நுழைந்த விஷயம் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டதும் மக்களும் புலியும் ஒருவரை ஒருவர் நெருங்காத வண்ணம் வலைகள் கொண்டு வனத்துறையினர் தற்காலிக வேலி அமைத்திருந்தனர். இதனால் மக்களால் மேலும் முன்னேறி புலியை நெருங்க முடியவில்லை. மேலும் விலங்கு - மனித மோதலும் தவிர்க்கப்பட்டது.

சுவரில் ஏறி படுத்த புலி அங்கிருந்து நகர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தது. கிராமத்தில் இருந்து காலையில் வெளியான வீடியோ காட்சிகளில் சுவரில் அமர்ந்திருக்கும் புலியை தூரத்தில் உயரமான இடத்தில் இருந்து மக்கள் கூட்டம் வேடிக்கை பார்ப்பதை காண முடிந்ததது.

புலியைக் காண ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் கூட்டத்தினைப் பார்த்த புலி பயந்தே இருந்தது. புலி கிராமத்துக்குள் நுழைந்த தகவல் அறிந்து வருவாய் மற்றும் காவல் துறையினரும் அட்கோனா கிராமத்துக்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் புலியை பிடித்து கூண்டுக்குள் அடைத்து கிராமத்தில் இருந்து வெளியேற்றினர்.

கிராமத்துக்குள் புலி நுழைந்த இந்தச் சம்பவதில் யாரும் தக்கப்படவோ, காயம்படவோ இல்லை என்றாலும், அச்சமடைந்த கிராம மக்கள், வனத்துறையினரின் அலட்சியத்தாலேயே புலி கிராமத்துக்குள் நுழைந்தது என்று குற்றம்சாட்டினர்.

இந்தந நிலையில், நான்கு மாதத்தில் 5 பேர் புலி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர் கடந்த 2015-ம் ஆண்டு பிலிபித் மாவட்டத்தில் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதில் இருந்து நான்கு டஜன் புலி தாக்குதல் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in