Last Updated : 25 Dec, 2023 04:06 AM

 

Published : 25 Dec 2023 04:06 AM
Last Updated : 25 Dec 2023 04:06 AM

கிருஷ்ணகிரி அருகே வயல்களில் புழுக்களை வேட்டையாடும் கருப்பு நாரைகள்

கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி சாலையில் பல்லேரிப்பள்ளி அருகே நெல் நடவு செய்த நிலத்தில் புழுக்களை உண்ணும் கருப்பு நிற நாரைகள் கூட்டம். படம்: கி.ஜெயகாந்தன்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விளைநிலங்களில் காணப்படும் கருப்பு நாரைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 1,501 சதுர கி.மீ வனப் பகுதி ஆகும். இந்த வனத்தில், 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும், 172 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் காணப்படுகின்றன. இதனை தவிர மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு வெளி நாட்டு பறவைகள் வலசை வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 15 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இதில் எந்தெந்த பகுதிகளில் என்ன வகையான பறவை இனங்கள் உள்ளன என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் குந்தாரப்பள்ளி, பல்லேரிப்பள்ளி, தளவாய்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தற்போது கருப்பு நிற நாரைகள் அதிகளவில் காணப்படுகின்றன. வழக்கமாக தங்களது நிலங்களில் அதிகளவில் கொக்குகள், நாரைகள் வெள்ளை நிறத்திலேயே பார்த்த நிலையில், தற்போது நாரைகளில் கருப்பு நிற நாரைகள் உள்ளதை காண முடிகிறது என்கின்றனர் விவசாயிகள். கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி வழியாகச் செல்லும் பொதுமக்கள் கருப்பு நிற நாரைகள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.

அரிதான பறவை - இது குறித்து வனஉயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: கருப்பு நாரைகள் காணப்படுவது அரிதான ஒன்று. ஆனால், கடந்த ஒரு சில ஆண்டுகளாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் முடிந்த பின்பு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு நிற நாரைகள் தென்படுகின்றன. குறிப்பாக நடவுக்கு உழவு செய்த நிலத்தில், வெள்ளை நாரைகளுடன் சேர்ந்து கருப்பு நிற நாரைகள் கூட்டம், கூட்டமாக புழுக்களை உண்பதை காண முடிகிறது. அரிய வகையான பட்டியலில் உள்ள கருப்பு நாரைகளை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது, என்றனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலர்கள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலங்களில் வலசை வரும் கருப்பு நிற நாரைகள், சில மாதங்களில் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விடும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x