கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு: மலர்ச்செடிகளை நிழல்வலையால் போர்த்தி பாதுகாப்பு
திண்டுக்கல்: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரையன்ட் பூங்காவில் மலர் செடிகளை பனி பாதிக்காமல் இருக்க நிழல் வலைகள் அமைத்து தோட்டக்கலைத்துறையினர் பாதுகாப்பு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலமாக இருக்கும். இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருவதால் உறை பனி குறைந்து, அடர் பனி மூட்டம் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவில் வெப்பநிலை வெகுவாக குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இரவில் 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
2024-ம் ஆண்டு மே மாதம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடக்கவுள்ள 61-வது மலர்க் கண்காட்சிக்காக முதல் கட்டமாக சால்வியா, பிங்க் அஸ்டர், டெல்பினியம், லில்லியம் போன்ற மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் மலர்ச் செடிகள் பாதிக்காமல் இருக்க தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் நிழல் வலைகளை போர்த்தி பாதுகாத்து வருகின்றனர்.
இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், ''தில தினங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்துள்ள செடிகள் பாதிக்காமல் இருக்க மாலையில் நிழல் வலைகளால் செடிகளை மூடி விடுவோம். மறுநாள் காலையில் நிழல் வலையை எடுத்து விடுவோம். இதன் மூலம் மலர்ச் செடிகளை பாதுகாக்கலாம்'' என்றார்.
