

ஓசூர்: அஞ்செட்டி பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், பல விவசாயிகள் பயிர் சாகுபடியைக் கைவிட்டுள்ளனர். மேலும், விலங்களிடமிருந்து பயிர்களைக் காக்க சூரியசக்தி மின் வேலி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேலும், இப்பகுதிகளில் பருவமழையை நம்பி சுமார் 10 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், கேழ்வரகு, சாமை, எள், நிலக்கடலை, அவரை, காராமணி, துவரை, ஆமணக்கு உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டாக அறுவடைக்குத் தயாராகும்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள், யானை, பறவைகளால் முழுமையாகப் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், வன விலங்குகளால் ஏற்படும் மகசூல் பாதிப்புக்கு வனத்துறை வழங்கும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், பல விவசாயிகள் நிலத்தில் சாகுபடி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.
சூரிய சக்தி மின்வேலி: இது தொடர்பாக தக்கட்டி பகுதி விவசாயி முனி கவுடா கூறியதாவது: அஞ்செட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள விவசாயிகள் மானாவாரிப் பயிர்களைச் சாகுபடி செய்கின்றனர்.
சில விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்து பசுமைக் குடில் மூலம் நர்சரி செடிகளை வளர்க்கின்றனர். ஆண்டு தோறும் விளைச்சலுக்கு வரும் மானாவாரி பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுக்க வனத்துறை ஒரு சில பகுதிகளில் மட்டும் சூரிய சக்தி மின் வேலியை அமைத்துள்ளனர்.
இந்த மின் வேலிகளும் போதிய பராமரிப்பு இல்லாமல் சேத மடைந்துள்ளதால் வன விலங்குகள் சுலபமாக விளை நிலங்களில் நுழைந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் உடல் உழைப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் அதிகரித்து வருவதால், சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களில் பயிர் சாகுபடி செய்யாமல் விவசாயிகள் காலியாக விட்டுள்ளனர். மேலும், பல விவசாயிகள் ஓசூர் உள்ளிட்ட நகரப் பகுதிக்கு மாற்றுத் தொழிலுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
அரசு நடவடிக்கை அவசியம்: எனவே, வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களை ஆய்வு செய்து, வனவிலங்கு வருவதைத் தடுக்க சூரிய சக்தி மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.