

மதுரை: மதுரை மாநகராட்சி ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் பல்லுயிர்களும் வாழக்கூடிய அழகிய இயற்கை காட்டை 30 ஏக்கரில் உருவாக்குகிறது.
மதுரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 731 ஹெக்டேர் பரப்பில் இயற்கைக் காடுகள் உள்ளன. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது மதுரையில் காடுகளின் பரப்பு குறைவு. முன்பு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. ஆனால், தற்போது மதுரை போன்ற பெருநகர் பகுதிகளில் வீடுகளில் மரங்கள் நடுவதற்கு இடம் இல்லை.
660 சதுர அடி முதல் 1,200 சதுர அடியில்தான் தனி வீடுகள் கட்டப்படுகின்றன. கட்டுமானப் பொருட்கள், வீட்டடி மனைகள் விலை அதிகரிப்பால் அடுக்கு மாடி குடியிருப்புகளே அதிகம் கட்டப்படுகின்றன. வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட இடம் இல்லாமல் சாலைகளில் மக்கள் நிறுத்து கின்றனர். மற்றொரு புறம், சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன.
அதனால், மரங்களின் அடர்த்தி குறைந்து காற்று மாசுபாடு, சுற்றுச் சூழல் சீர்கேடு அதிகரித்து மழையும் குறைகிறது. காற்றையும், நீரையும் மனிதர்களுக்குத் தந்து சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கும் காடுகளைப் பற்றிய புரிதல், விழிப்புணர்வு இன்றைய தலை முறையினருக்கு இல்லை.
அதனால், இன்றைய தலைமுறையினருக்கு காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற் காக மதுரை மாநகராட்சி அவனியாபுரம் அருகேயுள்ள வெள்ளக் கல் உரக் கிடங்கு பகுதியில் பல்லுயிர்களும் வாழக்கூடிய வகையில் 30 ஏக்கரில் ‘இயற்கை காடு’ உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ‘ஜீரோ பட்ஜெட்’ முறையில் அமைகிறது.
இது குறித்து மேயர் இந்திராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது பல்லுயிர்கள் வாழக்கூடிய ‘அழகிய இயற்கை காடு’ ஒன்றை வெள்ளக்கல் உரக்கிடங்கு அருகே 30 ஏக்கரில் மாநகராட்சி உருவாக்க உள்ளது. இதற்காக மாநகராட்சி ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் இந்தக் காட்டை உருவாக்க உள்ளது.
முதற்கட்டமாக 10 ஏக்கரில் நாவல், இலந்தை, மா, பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்களை நட உள் ளோம். அதுபோல், ஆக்ஸிஜன் அதிகம்கொடுக்கும் மரங்களையும் நடுகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தக் காட்டை உருவாக்க உள்ளோம். இந்தக் காட்டை உருவாக்கத் தேவைப்படும் தண்ணீர், வெள்ளக்கல் உரக்கிடங்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.
அதற்கான இயற்கை உரமும் அங்கிருந்து பெற்று மரங்கள் நடுவதற்குப் பயன்படுத்த உள்ளோம். பறவைகள், பல்லுயிர்கள் வாழக் கூடிய இடமாக வனத்துறையினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தன்னார் வலர்களின் ஆலோசனைகளுடன் இந்தக் காட்டை உருவாக்கு கிறோம்.
மழைநீரைச் சேகரிக்க இந்தக் காட்டின் நடுவே ஆங்காங்கே சிறிய தடுப்பணைகள் அமைக்கப்படும். மழைக் காலத்தில் தண்ணீரை இந்தத் தடுப்ணையில் சேகரித்து மழையில்லாத காலத்தில் மரங்க ளுக்கு விட ஏற்பாடு செய்யப்படும். ஜீரோ பட்ஜெட் முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதால் பொருளாதார இழப்பு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.