

கிருஷ்ணகிரி: எதிர்பார்த்த மழையின்மை மற்றும் வெயில் தாக்கம் அதிகரிப்பால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப் படுகிறது. குறிப்பாக பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிலக் கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையைப் பொறுத்து 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக் கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. மழையை மட்டுமே நம்பி ஜூன் மாதங்களில் நிலக்கடலை மானாவாரி நிலங்களில் விதைக்கப்படும். தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பொய்யும் மழையால் செடிகள் வளர்ந்து பூ பூத்து
நிலக்கடலை அறுவடைக்குத் தயாராகும். இந்நிலையில், இந்தாண்டு, நிலக்கடலை விதைப்புக்குப் பின்னர் பருவமழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நிலக்கடலை செடிகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: பருவ மழையை நம்பியே நிலக்கடலை, சோளம், துவரை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு நிலக்கடலை மகசூல் அதிகரித்து, நல்ல விலையும் கிடைத்தது. மேலும், இங்கு அறுவடை செய்யப்படும் நிலக்கடலையை பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். இதனால், சந்தை வாய்ப்பும் எளிதாக உள்ளதால் விவசாயிகள் பலர் நிலக்கடலையைச் சாகுபடி செய்துள்ளனர்.
ஒரு ஏக்கர் பயிர் செய்ய சுமார் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. நிலக்கடலை செடிகளில் பூக்கள் பூத்த தருணமான தற்போது, எதிர்பார்த்த மழை இல்லாததால், செடிகள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. வரும் நாட்களில் மழை பெய்தால் மட்டுமே நிலக்கடலை மகசூல் கை கொடுக்கும். இல்லையெனில் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.