Published : 04 Jul 2023 06:53 PM
Last Updated : 04 Jul 2023 06:53 PM

பெருநகரங்களின் பெரிய பிரச்சினை - ஒலி மாசு பற்றி நாம் தீவிரமாக பேச வேண்டும். ஏன்?

ஒலி மாசு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். சிலருக்கு புதிதாக தெரியலாம். ஏன் ஒலி மாசு பற்றி இப்போது பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? ஒலி மாசு நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்ற உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது.

நம்மை சுற்றி ஏராளமான ஒலிகள் தினந்தோறும் ஏற்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் சத்தமும் ஒலி மாசு என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது.ஒலி மாசு என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்வோம்..

ஒலி மாசு: ஒலி மாசு என்பது ஒருவர் கேட்கும் சத்தம் எப்போது அவர்களின் செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறதோ அப்போது அதை ஒலி மாசு என்று மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றன. இந்த இரைச்சலை ஆங்கிலத்தில் Noice என்று அழைப்பார்கள். இந்த வார்த்தையின் ஆதி தொடக்க Nausea என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பிறக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி, எந்த சத்தம் நம் காதுகளில் 65 டெசிபல் அளவுக்கு மேல் ஒலிக்கிறதோ, அதுதான் ஒலி மாசு என்று குறிப்பிடப்படுகிறது. இதில் 120 டெசிபல் மேல் சென்றால் காதுகளில் மிகவும் வலியை உண்டாக்கும் அனுபவத்தை நாம் பெறுவோம்.

ஒலி மாசு எதனால் ஏற்படுகிறது? - ஒலி மாசு என்று சொன்னால் முதலில் போக்குவரத்தினால் வரும் சத்தங்கள்தான் பரவலாக கூறப்படுகிறது. நம் நேரத்தை குறைக்க பைக், கார், பேருந்து போன்ற வாகனகள் பயன்படுத்துகிறோம். இதில் ஒலிக்கும் சத்தம் 90 டெசிபல் முதல் 100 டெசிபல் மேல் வருகிறது. இதேபோல் ஒரு விமானம் 130 டெசிபல் அளவு சத்தத்தை வெளியிடுகிறது. கட்டுமான தளங்களிலும், சாலை மற்றும் நடைபாதை சிரமைப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் 110 டெசிபல் மேல் சத்தம் வருகிறது. இவ்வாறான சத்தங்களே பெரும்பாலும் ஒலி மாசாக கருதப்படுகிறது.

நமக்கு என்ன பாதிப்பு?- நாம் அதிகப்படியான சத்தங்கள் கேட்கும்போது முதலில் செவி பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகுவோம். இந்த ஒலி மாசுக்கு பரவலாக சிறியவர்களும் வயதானவர்களும்தான் பாதிப்படைவார்கள். மேலும், ஒலி மாசினால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, உளவியல் பிரச்சனைகளான மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, நினைவாற்றல் குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

மனிதர்களுக்கு மட்டுமா பாதிப்பா? - உண்மையில் ஒலி மாசினால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. அது ஒட்டுமொத்த சூழலையும் பாதிக்கிறது. இங்குதான் நாம் இதன் தீவிரத்தை உணர வேண்டும். ஒலி மாசு மனிதர்களைவிட அதிகளவில் பறவைகள், கடல் உயிரினங்கள், விலங்குகளுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மற்ற உயிரினங்களுக்கு எவ்வாறு பாதிப்பு வருகிறது? - கடல் உயிரினங்களான சிறிய மீன் முதல் டால்பின் வரை தங்களுக்குள் சமிக்ஞைகள் கொண்டுள்ளன. ஆனால் கடல் பரப்புகளில் எண்ணெய் - எரிவாயுவை எடுக்கும் கப்பல்கள் எழுப்பும் தீவிர ஒலிகள் இந்த கடல் வாழ் உயிரினங்களின் சமிக்ஞைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றின் தொடர்பை துண்டிக்கின்றன. இதனால் வழி தவறி செல்லுதல், வேட்டைத் திறன்களை மறத்தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு கடல் வாழ் உயிரினங்கள் உள்ளாகின்றன.

ஒலி மாசு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் கூறும்போது, “ஒலி மாசு சென்னை போன்ற நகரங்களில் அதிகமாக காணப்படுகிறது. ஒலி மாசுக்கு சென்னையில் ஓடும் வாகனத்தில் வரும் ஹார்ன் சத்தம் மட்டும் காரணம் என்று கூற முடியாது. வாகனங்களில் சைலன்சர், என்ஜின், சாலையுடன் உராயும் டயர் என அனைத்து வாகன அசைவுகளும் ஒலி மாசுதான். சென்னையில் ஏன் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கு திட்டமிடப்படாத அதிவேகமான நகரமயமாக்களுக்கு சென்னை உட்படுத்தப்பட்டு இருப்பதே காரணம்.

இப்போது சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் சென்னையில் வசித்து வருகிறார்கள். இதில் 50% வீடுகளில் இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் எந்தப் பகுதிகளிலும் மண்டல விதிகளை பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, தி.நகரை எடுத்துக் கொள்வோம்..அதில் ஒரு பகுதி வணிக வளாகமாக உள்ளது. மற்றொரு பகுதி குடியிருப்பு பகுதியாக உள்ளது. மூன்றாவது பகுதி பள்ளிகள் அமைந்துள்ளன. இவ்வாறு மூன்றும் ஒரே பகுதியில் இருப்பதால் அங்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. அப்போது தீவிர ஒலி மாசு ஏற்பட வழிவகுக்கிறது.

ஒலி மாசுவை தடுக்க அதன் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் .கடந்த 2000-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட விதிகளில், 22 ஆண்டுகளுக்கு பின்பும் எந்த வித திருத்தங்களும் இல்லாமல் இருப்பதை மாற்றம் வேண்டும். தற்பொழுது இந்தியாவில் மொத்தம் 7 நகரங்களில் நகரத்திற்கு தலா 10 இடங்கள் என்று 70 ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இதில் மாற்றம் வேண்டும்.

ஒலி மாசு அதிகம் ஏற்படும் நெரிசலான இடங்கள் கண்டறியப்பட்டு அனைத்து இடங்களிலும் ஒலி மாசு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் வரும் காலங்களில் நகர ஒலி மாசுவைப் புரிந்து கொள்ளவும் அதனைக் குறைப்பதற்கானத் நடவடிக்கைகளையும் நம்மால் எடுக்க முடியும். வருங்கால நகர வடிவமைப்பின்போது ஒலி மாசினையும் கருத்தில்கொண்டு நகரத் திட்டமிடல் இருந்தால் மட்டுமே ஒலி மாசு பிரச்சினையில் இருந்து நம் பெருநகரங்கள் தப்பிக்கும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x