பருவநிலை மாற்றம், நோய் பாதிப்பை தடுக்க ‘நிழல்வலை’ மூலம் தக்காளி செடிகள் பராமரிப்பு @ சூளகிரி

பருவநிலை மாற்றம், நோய் பாதிப்பை தடுக்க ‘நிழல்வலை’ மூலம் தக்காளி செடிகள் பராமரிப்பு @ சூளகிரி

Published on

கிருஷ்ணகிரி: வெயிலின் தாக்கம் மற்றும் நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்கத் தக்காளி வயல்களில், ‘நிழல்வலை’ அமைத்து செடிகளை சூளகிரி பகுதி விவசாயிகள் பாதுகாத்தும், பராமரித்தும் வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள்: ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏக்கருக்குச் சராசரியாக 30 டன் வரை மகசூல் கிடைக்கும். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் சந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மகசூல் அதிகரிக்கும்போது, விலை குறைவாகவும், மகசூல் பாதிக்கப்படும்போது விலை உயர்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு நிலையான வருவாயை எதிர்பார்க்க முடியாது. 50% மகசூல் பாதிப்பு: நடப்பு பருவத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது, தக்காளி விலை கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், தக்காளிச் செடிகளைக் காக்க சூளகிரி பகுதி விவசாயிகள் தக்காளி வயல்களில், ‘நிழல்வலை’ அமைத்துப் பராமரித்து, பாதுகாத்து வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, பூச்சித் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோடைக் காலம் நிறைவடைந்தும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. திடீர் மழையும், அதனைத் தொடர்ந்து வெயிலும் வாட்டி வருவதால், மகசூல் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டம்: இது போன்ற பருவமாற்றம் மற்றும் நோய்த் தாக்குதலிலிருந்து தக்காளியைக் காக்க எங்கள் பகுதியில், ‘நிழல் வலை’ அமைத்து தக்காளிச் செடிகளைப் பராமரித்து வருகிறோம். மேலும், விவசாயிகள் மற்றும் நுகர்வோரைக் காக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல் படுத்த வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in