புதுச்சேரி கடல் என்ன குப்பைத் தொட்டியா?

புதுச்சேரி கடல் என்ன குப்பைத் தொட்டியா?
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சூழியல் சீர்கேடு ஏற்பட்டு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியும், அரசு தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்கால்களின் வழியே செல்லும் சாக்கடைகள் அனைத்தும் பல இடங்களில் நேரடியாக சென்று அப்படியே கடலில் கலக்கின்றன. அதனுடன் திடக்கழிவுகள் குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் குப்பைகள் எந்த தடையும் இல்லாமல் அப்படியே கடலில் வந்து விழுகின்றன.

இதனால் கடல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளது. அவ்வழிச் செல்லும் கழிவுநீர் கால்வாயின் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. அவை தூய்மைப்படுத்தப்படாமல் மண்டிக் கிடக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து அந்த வழியே செல்லவே உடல் கூசும் அளவுக்கு உள்ளது. இதனால் கொசு தொல்லையும் அதிகளவில் உள்ளது.

அலைகள் அடித்து கரைகளில் ஒதுங்கும் குப்பைகள் ஒரு புறம், கடலுக்குள் செல்லும் குப்பைகள் மறுபுறம் என இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் குப்பைகளால் கடல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வு மிக கேள்விக்குறியாகியுள்ளன.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "புதுச்சேரி நகரத்தின் பெரும்பான்மையான கழிவுநீர் தேங்காய்திட்டு வழியாக கடலில் கலக்கிறது. கழிவு நீரை சுத்திகரித்துதான் கடலுக்குள் விட வேண்டும். மேலும் வாய்க்கால்களில் வரும் கழிவுநீருடன் வரும் குப்பைகள் கடலில் சேராமல் இருக்க இரும்பு வலை அமைத்திருக்க வேண்டும். இதைச் சுட்டிக்காட்டி வலைகள் அமைக்குமாறு கோரினோம். ஓரிரு வாய்க்கால்களில் பெயரளவிற்கு அமைத்து விட்டு, இதர இடங்களை அப்படியே விட்டு விட்டனர்.

இப்படியாக வந்து கடலில் கலக்கும் குப்பைகள் கடற்கரையில் ஒதுங்கி கிடக்கின்றன. கடலுக்குள் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கடல் வாழ் உயிரினங்கள் உணவாக கருதி சாப்பிடுகின்றன. உதாரணத்துக்கு, கடல் ஆமைகள் வெள்ளை நிறத்தில் மிருதுவாக இருக்கும் ஜெல்லி மீன்களை விரும்பி உண்ணும். கடலில் சிக்கும் பாலித்தீன் பைகளை ஜெல்லி மீன் என கருதி சாப்பிடும் கடல் ஆமைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த விஷயத்தில் அரசின் தவறு ஒருபுறம் இருக்க, பொதுமக்களின் மீதும் பெருந்தவறு உள்ளது. குப்பைகளை முறையாக எடுத்து வைத்து, காலையில் நகராட்சியில் இருந்து, அதை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால், சிலர் அப்படிச் செய்யாமல் கழிவுநீர் வாய்க்காலில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் இப்படி சேர்ந்து கடும் சூழியல் சீர்கேட்டை ஏற்படுத்தியிருக்கிறது. கடல் மாசுபாட்டை அரசும், மக்களும் கூட்டாக சேர்ந்து செய்து வருகின்றனர். இது நாளடைவில் திரும்பி நம்மையே தாக்கும்” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சதுப்பு நிலங்களில்..: புதுச்சேரியில் தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், காக்காயத்தோப்பு, நல்லவாடு பகுதிகளில் ‘மாங்குரோவ்’ எனப்படும் அலையாத்தித் தாவரங்கள் நிறைந்த சதுப்பு நில காடுகள் உள்ளன.

கடலுடன் ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ள இந்த சதுப்பு நிலங்களே 2004 சுனாமியின் போது அலைகளின் சீற்றத்தை பெருமளவில் தடுத்து, அப்பகுதியில் பாதிப்பை குறைத்தது. இந்த கழிமுகப் பகுதியில் நாளாவட்டத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து வருகின்றன. இதனால் தற்போது இக்காடுகளின் அடர்த்தி குறைய தொடங்கியுள்ளது. இப்படியாக இயற்கைச் சமநிலை கெடுகிறது.

சதுப்பு நிலக்காடுகள் பகுதியை பாதுகாக்க சுற்றுச்சூழல் துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. அதை ஒன்றும் செய்யாமல், அப்படியே விட்டிருந்தால் கூட அது தன்னை தற்காத்துக் கொள்ளும். ஆனால், கழிமுகப் பகுதியில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அவற்றை பாழ் படுத்தி வருகின்றன.

இப்படியாக புதுச்சேரி பகுதி கடல் குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. மக்கள் பொறுப்பின்றி செயல்பட, அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in