Last Updated : 22 Jun, 2023 06:11 AM

 

Published : 22 Jun 2023 06:11 AM
Last Updated : 22 Jun 2023 06:11 AM

வெள்ளியங்கிரி மலையில் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்ட 14 டன் பிளாஸ்டிக் கழிவு - வனத்துறை கூடுதல் தலைமை செயலர் பாராட்டு

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், பக்தர்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்று 'ஸ்டிக்கர்' ஒட்டி அனுப்பிய வனத்துறையினர். (கோப்பு படம்)

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களிடம் இருந்து மறுசுழற்சிக்காக 14 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் சேகரித்ததற்கு வனத்துறை கூடுதல் தலைமை செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலையும் ஒன்று. அங்கு மலையேற ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு செல்லும் பலர், தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருவர். இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்கி, அவற்றை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

விரிவான செய்தி வெளியீடு: எனவே, பக்தர்கள் மலையேறும்போது கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக் கொண்டு, கீழே வந்து பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் கோவைப் பதிப்பு இதழில் விரிவான செய்தி வெளியானது.

ரூ.20 வைப்புத் தொகை: அதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த பிப்.17-ம் தேதி முதல் வனத்துறையினர் அமல்படுத்தினர். இதன்படி, மலை ஏறுவதற்கு முன் பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்ளப்பட்டு, பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மலையேறி, இறங்கியபிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அளித்துவிட்டு வைப்புத்தொகையை பக்தர்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர். கடந்த மே 31-ம் தேதியுடன் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை வனத்துறையினரின் இந்த செயலுக்கு, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில், “வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிவதை தடுக்கும் வகையில் சிறப்பான திட்டத்தை கோவை வனத்துறையினர் அமல்படுத்தினர்.

அதன்படி, மொத்தம் 1.98 லட்சம் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்பட்டது. அதில் 1.66 லட்சம் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது, சுமார் 85 சதவீதம் ஆகும். எஞ்சிய கழிவுகளும் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் வனப்பகுதியில் 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள் தடுக்கப்பட்டுள்ளன. தலைமை வனப்பாதுகாவலர் தலைமையிலான கோவை குழுவுக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x