கெலமங்கலம் குடிநீர் கிணற்றில் குப்பைகள் வீசப்படுவதால் நீர் மாசடைவதாக மக்கள் வேதனை

கெலமங்கலத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட  குடிநீர் கிணற்றில்  குப்பைகள் கொட்டுவதால், நீர் மாசடைந்து உள்ளது.
கெலமங்கலத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் கிணற்றில் குப்பைகள் கொட்டுவதால், நீர் மாசடைந்து உள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் கிணற்றில் குப்பைகள் வீசப்படுவதால், நீர் மாசடைந்து, கிணறு பாழாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெட்டபட்ட, இக்கிணறு மூலம் கெலமங்கலத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

இதற்காக கிணற்றின் அருகே மின்மோட்டார் அறையும், அங்கிருந்து சிறிது தூரத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானது.

இந்நிலையில் தற்போது கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், பராமரிப்பு இல்லாமல், அப்பகுதியில் சிலர் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வீசி வருகின்றனர். இதனால் குடிநீர் கிணறு, குப்பை தொட்டியாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கெலமங்கலத்தை சேர்ந்த சிவபிரகாஷ் மற்றும் சிலர் கூறும்போது, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தற்போது தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால் பேரூராட்சி கிணறு பயனற்று போனது. மேலும், கிணற்றை பாதுகாக்க தவறியதால், சிலர் இதனை குப்பை தொட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிணற்றில் உள்ள நீர் மாசடைந்து, அவசர காலத்தில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறும். இதேபோல், குப்பைகள் நிறைந்து, ஆக்கிரமிப்பால், காலப்போக்கில் குடிநீர் கிணறு மாயமாகும்.

கம்பி வலை அமைக்க: மேலும், கிணற்றில் இருந்து சிலர் அனுமதியின்றி வர்த்தகரீதியாக தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதே நிலையில் தான் மின்மோட்டார் அறைக்கும், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியும் உள்ளது. இதுதொடர்பாக பேரூராட்சியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, குடிநீர் கிணற்றில் உள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். கிணற்றை சுற்றியும் கம்பி வலை அமைத்து மூட வேண்டும். கிணற்று தண்ணீரை பிறதேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in