

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் மாவோயிஸ்டுகள் இத்தகைய சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
மாநிலத்தில் கான்கர் உள்பட 3 தொகுதிகளில் வியாழக்கிழமை மக்களவைத் தேர்தல் நடைபெறு கிறது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினரும் உள்ளூர் போலீஸாரும் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பட்கான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்டகான்-மெந்த்ரா சாலையில் வெவ்வெறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 10 கிலோ எடை கொண்ட 2 டிபன் பாக்ஸ்கள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஐஇடி வகை வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் நிபுணர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர் என்றார்.
இதற்கிடையே, கவுசல்நர் கிராமம் அருகே பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ராஜ்மன் சலாம் (35), வினோத் கொரம் (26) ஆகிய 2 பேரை பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பல்வேறு குற்றச் செயல் களில் தொடர்புடைய இவர்கள் இருவரது தலைக்கும் மாநில அரசு பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.