யார் இந்த விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்? - ‘ராமன் விளைவு’ பங்களிப்பும் சாதனைகளும்!

இன்று - பிப்.28: தேசிய அறிவியல் நாள்
விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்

விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்

Updated on
3 min read

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் பிப்.28 அன்று, 1928-ல் கண்டறியப்பட்ட ‘ராமன் விளைவை' (ராமன் எஃபக்ட்) கவுரவிக்கும் வகையில் தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது.

உலகம் சர் சி. வி. ராமன் மற்றும் அவருக்குக் கிடைத்த நோபல் பரிசைப் போற்றும் வேளையில், இயற்பியல் உலகத்தையே மாற்றியமைத்த அந்த ஃபோட்டான்களை ஆய்வகத்தில் ராமனுடன் இணைந்து ஆவணப்படுத்திய ஒருவரை வரலாறு கவனிக்கத் தவறிவிடுகிறது.

அவர்தான் சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் (கே.எஸ்.கே.). இவரை அங்கீகரிக்காமல் இந்த நாளைக் கொண்டாடுவது என்பது இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வு வரலாற்றின் பாதியை மட்டுமே சொல்வதற்கு ஒப்பாகும்.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியரும், மைக்கேல் ஃபாரடே அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான ஸ்டீபன் இன்பநாதன் கூறியதாவது: 1898 டிச.4-ல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தில் பிறந்த கிருஷ்ணனின் பயணம், தடைகளைத் தாண்டிய அறிவைத் தேடும் ஒரு விடாமுயற்சியால் உருவானது.

தந்தையின் எதிர்பாராத மரணத்தால் உயர்கல்விக்கான காலக்கெடுவை அவர் தவறவிட்டார். ஆனால், சூழ்நிலைக்கு அடிபணிய மறுத்த அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் ஜம்ப்ரோவை சந்தித்தார். அந்த இளைஞனின் அறிவுத்திறனையும் சூழலையும் கண்டு ஜம்ப்ரோ, 1914 ஜூலை 8 அன்று ஒரு சிறப்பு விதிவிலக்காக அவரை கல்லூரியில் சேர்த்துக்கொண்டார்.

அக்கல்லூரி வரலாற்றில் அவர் 466-வது மாணவர். இந்த காலகட்டம் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற காலத்தில், அவர் அங்கிருந்த டேனியல் புவர் நினைவு நூலகத்துக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள பல்வேறு புத்தகங்களைப் பயன்படுத்தி தனது அறிவுத் தேடலை விரிவுபடுத்தினார்.

அமெரிக்கன் கல்லூரியின் பிரதான கட்டிடத்தின் பழைய படம்.

அமெரிக்கன் கல்லூரியின் பிரதான கட்டிடத்தின் பழைய படம்.

மேலும், அவர் ஆங்கில இதழ்களைத் தீவிரமாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். கிருஷ்ணன் இளம் அறிவியல் பட்டம் பெற்ற பிறகு, சென்னை கிறித்தவக் கல்லூரியில் முதுநிலை பயின்றதோடு அங்கேயே வேதியியல் செய்முறை விளக்காளராகப் பணிபுரிந்தபோது அவரது புகழ் பரவியது.

மதிய உணவு இடைவேளையில் கிருஷ்ணனின் விரிவுரைகளைக் கேட்பதற்காகவே மற்ற கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வருவது அக்காலத்தில் பிரபலம்.

சர் சி.வி.ராமன்

சர் சி.வி.ராமன்

1920-ல் அவர் கொல்கத்தாவுக்குச் சென்று ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில்' (ஐஓசிஎஸ்) சேர்ந்தார். அங்கு 1925 முதல் 1928 வரை சி.வி.ராமனின் முதன்மை ஆய்வுக் கூட்டாளியாகப் பணியாற்றினார். ராமன் விளைவு (ஒளியின் மீள்தன்மையற்ற சிதறல்) என்பது இவர்களது கூட்டு வெற்றியாகும்.

1930-ல் ராமன் நோபல் பரிசு பெற்றபோது கிருஷ்ணனின் முக்கியப் பங்களிப்பை வெளிப்படையாக அங்கீகரித்தார். 1928-ம் ஆண்டு செய்த பணியின் அடிப்படையில் மட்டுமே இந்த விருது வழங்கப் பட்டிருந்தால், கிருஷ்ணனுக்கும் அதில் பங்கு கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கிருஷ்ணனின் பணி இத்துடன் நின்றுவிடவில்லை.

பின்னர் டாக்கா மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற அவர், படிகக் காந்தவியல் (கிரிஸ்டல் மேக்னெட்டிஸம்) துறையில் உலகப் புகழ்பெற்ற வல்லுநரானார். படிகங்களின் காந்தப் பண்புகளை மிகத் துல்லிய மாக அளவிட `கிருஷ்ணன்-பானர்ஜி முறையை' உருவாக்கினார்.

விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்

விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்

முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டது போல ஆய்வகத்துக்கு வெளியே கிருஷ்ணன் ஒரு ‘முழுமையான மனிதராக’ இருந்தார். சிக்கலான சமன்பாடுகளுக்கும் செவ்வியல் இலக்கியங்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந்த அபூர்வ பன்முக அறிஞர் அவர்.

தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். ஷேக்ஸ்பியர் மற்றும் விக்டர் ஹியூகோவின் படைப்புகளை நேசிப்பவர். அமைதி வழியைப் பின்பற்றிய அவர், 1955-ல் ஐநா அமைதி மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். 1947-ல் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் (என்பிஎல்) முதல் இயக்குநராக கிருஷ்ணன் தேர்வானார்.

அவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் (எப்ஆர்எஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டார், 1946-ல் சர் பட்டம் பெற்றார், மேலும் 1958-ல் பட்நாகர் விருதைப் பெற்ற முதல் நபரானார். இத்தனை சிறப்புகளுக்கு மத்தியிலும் மிக எளிமையான கருவிகளைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஆய்வு முடிவுகளை எட்டும் ஆச்சரியம் படைக்கும் மனிதராகவே அவர் திகழ்ந்தார்.

இந்த தேசிய அறிவியல் நாளில், சர் கே.எஸ்.கிருஷ்ணனை ஒரு கூட்டாளியாக மட்டுமல்லாமல், இந்திய அறிவியலின் தந்தைமார்களில் ஒருவராகவும் நாம் நினைவுகூர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விஞ்ஞானி சர் கே.எஸ்.கிருஷ்ணன்

சூரியக் கட்சி - கதர் பார்ட்டி ‘டீல்’ நிலவரம் என்ன? | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in