ஏஐ தரவு அறிவியல் துறைகளில் உங்கள் எதிர்காலம் என்ன? | உயர் கல்வி வழிகாட்டுதல்

ஏஐ தரவு அறிவியல் துறைகளில் உங்கள் எதிர்காலம் என்ன? | உயர் கல்வி வழிகாட்டுதல்
Updated on: 
2 min read

பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் ஒவ்வோர் ஆண்டும் பெற்றோரிடையே ஒரு கேள்வி தவறாமல் எழுகிறது: ‘ஏ.ஐ, தரவு அறிவியல் படிக்கலாமா?’ சிலர் இதை எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் துறை என்று கொண்டாடுகிறார்கள்.

இன்னும் சிலரோ, ஏ.ஐ. வந்துவிட்டால் வேலைவாய்ப்புகளே இல்லாமல் போய்விடுமா, இதைப் படித்து என்ன பயன்?’ என்று தயங்குகிறார்கள். இந்த இரண்டு கருத்துகளிலும் ஓரளவு உண்மையும் ஓரளவு மிகைப்படுத்தலும் இருக்கின்றன.

உங்கள் ஊரில் உள்ள ஒரு மளிகைக் கடைக்காரரை நினைத்துப் பாருங்கள். தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே எண்ணெய், சர்க்கரை போன்ற பொருள்களை வழக்கத்தைவிடக் கூடுதலாக வாங்கி இருப்பு வைத்துவிடுவார்.

இதை யாரும் அவருக்குக் கற்றுக்கொடுக்கவில்லை; பல ஆண்டுகளாக அவர் பராமரித்து வரும் கணக்கு நோட்டும் அனுபவமும்தான் இதற்குக் காரணம். கடந்த காலத் தரவுகளைப் பார்த்து முடிவெடுக்கும் இந்த அணுகுமுறையே தரவு அறிவியலின் அடிப்படை. இதே வேலையை லட்சக்கணக்கான தரவுப் பதிவுகளை வைத்து கணினி தானாகக் கற்றுக்கொண்டு செய்தால், அது ஏ.ஐ.

சுயமாகக் கற்றல்

வகுப்பறைக் கற்றல் ஒரு தொடக்கம்தான்; அதற்கு அப்பால் மாணவர்கள் சுயமாகவும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வழிகள் இன்று ஏராளம். தேவைப்படுவது, தினமும் குறைந்தது ஒரு மணி நேரத்தை இதற்காக ஒதுக்கும் பழக்கம்தான்.

புத்தகங்களைப் படிப்பதால் மட்டுமே நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. Problem Solving-உம் அப்படித்தான்; தொடர்ந்து முயற்சி செய்து, பயிற்சி செய்தால்தான் அதில் தேர்ச்சி பெற முடியும். Loops and Logics, LeetCode, HackerRank போன்ற Practice Platforms இதற்குப் பயன்படுகின்றன. நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு Problems-ஐத் தீர்க்கும் பழக்கம், Coding Interview-களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும்.

Coding மட்டுமல்ல; Aptitude, Logical Thinking ஆகியவற்றுக்கான பயிற்சியும் அதே அளவு முக்கியம். பல நிறுவனங்களின் Placement தேர்வுகளில் முதல் சுற்றாக Aptitude தேர்வு நடைபெறுகிறது. எண் கணக்குகள், தர்க்கப் புதிர்கள், அட்டவணைகள், தரவுகளைப் புரிந்துகொண்டு பதிலளித்தல் (Data Interpretation) போன்ற கேள்விகள் இதில் இடம்பெறும்.

இந்தச் சுற்றில் தேர்ச்சி பெறாவிட்டால், Coding திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பே கிடைக்காமல் போகலாம். எனவே, முதல் ஆண்டிலிருந்தே வாரத்திற்குச் சில மணி நேரத்தை Aptitude, Puzzles பயிற்சிக்காக ஒதுக்குவது நல்லது.

ஒரு பிரச்சினையைச் சிறு படிகளாகப் பிரித்து ஆராயும் Logical Thinking, ஏ.ஐ.க்கும் அடிப்படையான திறன். நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான், அதைச் சரியாகக் கணினிக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.

MIT தனது 2,500-க்கும் மேற்பட்ட படிப்பு களுக்கான பாடப்பொருள்களை OpenCourseWare வழியாகக் கட்டணமில்லாமல் வழங்குகிறது.

ஐஐடி சென்னை போன்ற நிறுவனங்களும் தரவு அறிவியல் படிப்புகளை இணையம் வழியாக வழங்குகின்றன. இவை உணர்த்தும் செய்தி ஒன்றுதான்: கேட்டுத் தெரிந்துகொள்வதைவிட, செய்து பார்ப்பதன் மூலமே கற்றல் ஆழமாகிறது.

அனுபவமே பலம்

இந்தத் துறையில் தரவு பகுப்பாய்வாளர் (Data Analyst), தரவு அறிவியலாளர் (Data Scientist), தரவுப் பொறியாளர் (Data Engineer), இயந்திரக் கற்றல் பொறியாளர் (Machine Learning Engineer), ஏ.ஐ. / ஜென் ஏ.ஐ. பொறியாளர் (AI / GenAI Engineer) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன.

ஏ.ஐ., தரவு அறிவியல் துறை இளைய தலைமுறையினருக்கு மட்டுமே உரியதல்ல. வங்கிப் பணி, மருத்துவம், இயந்திரவியல், தொழில்நுட்பத் துறை என எந்தத் துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும், அந்தத் துறையில் பெற்ற அனுபவம் அவர்களுக்குப் பெரிய பலம்.

Python, SQL, Statistics ஆகியவற்றின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பணியிடத்தில் உள்ள ஒரு சிக்கலைத் தரவு மூலம் தீர்க்க முயற்சிப்பது சிறந்த தொடக்கமாக இருக்கும்.

மூத்த பணிநிலைகளில் இருப்பவர்கள் Model Monitoring, Bias, Explainability, DPDP Act, 2023 போன்ற ‘Responsible AI’ தொடர்பான அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று ஏ.ஐ. கருவிகளே சில நொடிகளில் ‘கோட்’ எழுதிவிடுகின்றன; பல நேரத்தில் அவை சரியாகவும் இருக்கின்றன.

ஆனால், ஏ.ஐ. உருவாக்கிய கோட் சரியானதா, பிழையற்றதா, பாதுகாப்பானதா என்பதைச் சோதித்தறியத் தெரிந்தவர்களுக்கே இனி அதிகத் தேவை இருக்கும். ஏ.ஐ. நம் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடுமா என்கிற கேள்விக்கு ஒரே வரியில் பதிலளிக்க முடியாது.

ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். ஏ.ஐயைத் திறம்படப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், அதைப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட முன்னிலையில் இருப்பார்கள். அந்த வரிசையில் இடம்பெற, இன்றே உங்கள் அடித்தளத்தை வலுப்படுத்தத் தொடங்குங்கள்.

- அஸ்வின் ராமசாமி, கட்டுரையாளர், கல்வியாளர், தொழில் வழிகாட்டுதல் நிபுணர்

ஏஐ தரவு அறிவியல் துறைகளில் உங்கள் எதிர்காலம் என்ன? | உயர் கல்வி வழிகாட்டுதல்
இசையையும் தாளத்தையும் கண்டறியலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 36

X