

மானாமதுரை: மானாமதுரையில் மரம் ஏறும் தொழிலாளி மகளுக்கு அரசுப் பள்ளிக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகே கல்குறிச்சியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் அந்தமானில் தென்னை மரம் ஏறும் தொழில் செய்கிறார். இவரது மனைவி சரஸ்வதி.
இவர்களது மகள் ரக்சிதா ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை சொந்த ஊரில் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படித்தார்.
மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். நீட் தேர்வில் 506 மதிப் பெண்கள் பெற்ற அவருக்கு அரசுப் பள்ளிக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவரை பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் பாராட்டினர்.