

கோப்புப் படம்
சென்னை: மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரிக் கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி கல்லூரிக் கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பார்வையில் காணும் அரசு கடிதத்தில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளித் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன். இது மிக அவசரம்.’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கல்லூரி கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாணவர் இயங்கங்கள், இடதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) அதே எண்ணில் வெளியிடப்பட்ட மற்றொரு சுற்றறிக்கையில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட முந்தைய கடிதம் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக கல்லூரிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், ‘மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழக காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தவெக அரசு பின்வாங்கியுள்ளது.
அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்?. முதல்வர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?
ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு இணையாக தமிழகத்தை ஆளும் தவெக அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தவெக அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?’ என்று திமுக விமர்சித்துள்ளது.
எக்ஸ் தளப் பதிவில், “மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மு.வீரபாண்டியன் கண்டனம்:
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியக் குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முடியாது. 18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும்.
நாட்டின் விடுதலைப் போராட்டம் உள்ளிட்டு, வரலாற்றில் மாணவர்களும், இளைஞர்களும் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்துள்ளனர். அந்தப் போராட்ட வரலாற்றை மறுப்பதும், மாணவர்களின் அரசியல் உணர்வை குற்றமாகக் கருதுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை குடிமக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதுதான் குற்றச்செயலாகும்.
நாட்டின் விடுதலைத் திருநாளன்று செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிய பிரதமர் மோடி, அரசுக் கொள்கைகளுக்கு மாற்றாகச் சிந்திப்பவர்களை, “திமாகி நக்சல்” என்றும், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்துத் தருமாறு வட்டாட்சியர் உத்திரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே, இந்த உத்தரவும் வந்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. இந்த ஆணைகள் தற்போது திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், இவற்றுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கடுமையான துறை வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாணவர்களின் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வைத் தடுப்பதற்குப் பதிலாக, அரசியலமைப்புச் சட்ட உரிமைகள், ஜனநாயக மாண்புகள், சமூக நீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகியவற்றை கல்வி நிறுவனங்களில் வலுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் வெளிப்படுத்துவதற்கான உரிமையை அரசு முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள, கல்வி நிறுவன மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.