

கோப்புப் படம்
சென்னை: மீன்வள ஆய்வாளர் பதவிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பிஎப்எஸ்சி பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்நிலை பணியின்கீழ் வரும் மீன்வள ஆய்வாளர் (Inspector of Fisheries) பதவியானது நேரடி நியமன முறையிலும் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. நேரடி நியமனத்துக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கான கல்வித் தகுதி மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பிஎப்எஸ்சி) அல்லது எம்எஸ்சி விலங்கியல், எம்எஸ்சி கடல்வாழ் உயிரியல் (மரைன் பயாலஜி), எம்எஸ்சி கடலோர மீன்வளர்ப்பு - இவற்றில் ஏதேனும் ஒரு படிப்பு அவசியம். எனினும் பிஎப்எஸ்சி பட்டதாரிகளுக்கே பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எம்எஸ்சி பட்டதாரிகள் மீன்வள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும் தகுதியான பிஎப்எஸ்சி பட்டதாரிகள் இல்லாவிட்டால் மட்டுமே அவர்கள் பரிசீலிக்கப்படுவர். ஆரம்ப காலத்தில் மீன்வள ஆய்வாளர் பதவிக்கான நேரடி நியமனத்தில் குறிப்பிட்ட சதவீத இடங்கள் பிஎப்எஸ்சி பட்டதாரிகளுக்கும் எம்எஸ்சி பட்டதாரிகளுக்கு தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு நியமனம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தற்போது மீன்வள ஆய்வாளர் பதவிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் பிஎப்எஸ்சி பட்டதாரிகள் மட்டுமே நேரடி மீன்வள ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலர் என்.சுப்பையன் வெளியிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக மீன்வள ஆய்வாளராக பணியில் சேருவோர் மீன்வளத் துறை உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். மீன்வள ஆய்வாளர் பதவிக்கு கல்வித் தகுதி மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பதால் விரைவில் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.