

173 ஆண்டுகள் பழமையான கோவை அரசு கல்லூரி.
கோவை: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு 1,727 காலி இடங்களுக்கு, 37,398 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கோவை ரேஸ்கோர்ஸ் அரசு கல்லூரி 1852-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது.
173 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் முதுபெரும் அரசு கல்லூரிகளில் ஒன்றாக இந்த கல்லூரி இருந்துவருகிறது. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என 230 பேர் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில் நகரங்களில் உள்ள கல்லூரிகளை நோக்கி பலரும் படையெடுத்து வருவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுக்க நகர்ப்புற கல்லூரிகளில் அதிக வாய்ப்பு இருப்பது தான் என்கின்றனர், கல்வியாளர்கள்.
கோவை அரசு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் கூறியதாவது: காலை மற்றும் மாலை என இருவேளைகளில் வகுப்புகள் நடக்கின்றன. 23 பாடங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 6 ஆயிரம் பேர் படிக்கும் அரசு கல்லூரியாக இது உள்ளது.
தமிழகத்தின் தொழில்துறை மாவட்டமான கோவையில் படித்தால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது மாணவர்களின் நம்பிக்கை. ஏற்கெனவே படித்த மாணவர்கள் பலரும், வெளியூரில் இருந்து வந்து இங்கு படித்து, இதே ஊரில் வேலைக்கு சேர்ந்து, செட்டில் ஆன குடும்பங்கள் பல உண்டு. அந்த அடிப்படையிலும் பலர் இங்கு வருகின்றனர்.
குறிப்பாக பிளஸ் 2 வரை கிராமப்புறங்களில் படித்தாலும், கல்லூரி படிப்பை நகரத்தில் தான் படிக்க நினைக்கின்றனர். நடப்பாண்டில் கோவை அரசு கல்லூரியில் 19,483 ஆண்களும், 17,894 பெண்களும் என மொத்தம் 37,398 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் 400-க்கும் அதிகமான இடங்களுக்கு 10 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் வந்துள்ளன. மேட்டுப் பாளையம் அரசு கல்லூரியில் 480 இடங்களுக்கும், புலியகுளம் மகளிர் கல்லூரியில் 400-க்கும் அதிகமான இடங்களுக்கு விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன.
பிளஸ் 2 வரை தனியார் பள்ளிகளில் பலர் படித்தாலும், கல்லூரி படிப்பை பெரும் செலவு செய்து தனியாரில் படிக்க முடியாத பலருக்கும் அரசு கல்லூரி தான் விருப்பத்தேர்வு.
மருத்துவம், பொறியியல் தொடங்கி கலை, அறிவியல் படிப்புகள் வரை தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் போட்டித்தேர்வுகள் இந்த வாய்ப்பை விரிவுபடுத்தி இருப்பதும் முக்கிய காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கலந்தாய்வில் பங்கேற்க வந்த பெற்றோர் கூறும்போது, “நகர்ப்புறத்தில் பாட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. உதாரணத்துக்கு சில துறைகள், சில கல்லூரிகளில் மிக நன்றாக இருக்கும்.
ஐடி, பி.காம். சிஏ., பிகாம் புரபஷனல் அக்கவுண்ட்ஸ், இ-காமர்ஸ் உள்ளிட்ட சில படிப்புகள் தனியார் கல்லூரிகளில் படித்தால் பெரும் செலவாகும்.
ஆனால் அதேசமயம் அரசு கல்லூரிகளில் படிக்கும்போது செலவு குறைவு. குடும்பத்தின் பொருளாதாரத்தை காக்கும் வகையில் இங்கு தொழில் வாய்ப்புகள் இருப்பதும் மற்றொரு முக்கிய காரணம்” என்றனர்.