

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கணிதப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் கணிதத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் கூறும்போது, “கணிதப் பாடத்துக்கான வினாத்தாளில் பெரும்பாலும் எளிதான வினாக்களே இடம் பெற்றிருந்தன.
எனினும், ஒரு மதிப்பெண் பகுதியில் 2 கேள்விகளும், இரு மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாவும் கடினமாக இருந்தன. அதேபோல், 5 மதிப்பெண் பகுதியில் பெரிதும் எதிர்பார்த்த தேற்றம் இடம்பெறாதது ஏமாற்றம் அளித்தது. இதனால் சென்டம் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.
பத்தம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு மார்ச் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்.6-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ளது. தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.